மதவாத அமைப்புகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படாது: கே.சி.வேணுகோபால்

மதவாத அமைப்புகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படாது என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
திருச்சூர்,
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி பிராந்திய தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கும், கேரள மாநில காங்கிரஸ் கட்சிக்கும், மாவட்ட காங்கிரசுக்கும் ஒரே நிலைப்பாடு மட்டுமே உள்ளது. அது என்னவென்றால், மதவாத அமைப்புகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படாது. அவ்வாறு செயல்படுவதை காங்கிரசார் விரும்பவில்லை.
சபரிமலை தங்க கொள்ளை வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய நபர்களுக்கு, மேலும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவின் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த குழுவினர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றனர். எனவே, அவர்கள் மாநில அரசு, முதல்-மந்திரி, மந்திரிகள் விரும்பும் விதத்தில் நடந்து வருகின்றனர்.
ஆனால், சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை கேரள ஐகோர்ட்டில் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளதால், இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இல்லையென்றால் யாரும் கைது செய்யப்பட்டு இருக்க மாட்டார்கள். ஆனால், கேரள அரசின் செயல்பாடுகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதற்குரிய பதிலடியை சட்டமன்ற தேர்தலில் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.






