பரபரப்பான சூழ்நிலையில் இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆக்கபூர்வமான விவாதம் - எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ள பிரதமர் மோடி, இது தொடர்பாக ஆக்கபூர்வமான விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
பரபரப்பான சூழ்நிலையில் இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆக்கபூர்வமான விவாதம் - எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு
Published on

புதுடெல்லி,

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முழுமையான கடைசி தொடர் இது என்பதால் அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

இந்த தொடரை சுமுகமாக நடத்தி முடிப்பதற்காக அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை கோரும் வகையில் மத்திய அரசு நேற்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை நடத்தியது. பிரதமர் மோடி தலைமையில் சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மத்திய மந்திரிகள், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்து கட்சிகளும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கட்சிகள் எழுப்பும் தேசநலன் சார்ந்த பிரச்சினைகளை அரசு வரவேற்கும் என்று கூறிய அவர், நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடத்துமாறும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக கூறிய மோடி, நாட்டு மக்களின் நலன் கருதி சபையை சுமுகமாக நடத்த வேண்டியது நம் அனைவரின் முதன்மையான பொறுப்பாகும் என்றும் விளக்கினார்.

இந்த தகவல்களை நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கினார். பிரதமரின் வேண்டுகோளின்படி, நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

இதைப்போல மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு கேட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவும் நேற்று கூட்டி இருந்தார்.

இதில் பேசிய அவர், சபையை சுமுகமாக நடத்துவதற்கு உதவி மற்றும் உறுதுணையாக இருக்குமாறு அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதில் அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் சமமான பங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் அர்த்தமுள்ள வகையிலும், ஆக்கபூர்வமாகவும் அமைய வேண்டும் என நாங்களும் விரும்புகிறோம். மக்கள் பிரச்சினைகளை விவாதித்தால் மட்டுமே அவர்களுக்கு நெருக்கமாக இருக்க முடியும் என்று தெரிவித்தார்.

ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக கூட்டு விசாரணைக்குழு அமைக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என்று கூறிய குலாம்நபி ஆசாத், சி.பி.ஐ. போன்ற விசாரணை நிறுவனங்களை அரசு தவறாக பயன்படுத்துவது குறித்தும் கேள்வி எழுப்புவோம் என்று கூறினார்.

இதற்கிடையே அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக குளிர்கால கூட்டத்தொடரில் சிறப்பு மசோதா கொண்டு வரவேண்டும் என வலியுறுத்திய சிவசேனா பிரதிநிதி சந்திரகாந்த் கைரே, தவறும்பட்சத்தில் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ள இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மேலும் முத்தலாக் அவசர சட்டம், இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டம், கம்பெனிகள் அவசர சட்டம் போன்றவற்றுக்கு மாற்றாக புதிய மசோதாக்களை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால் ரபேல் ஒப்பந்த ஊழல், அயோத்தி விவகாரம், சி.பி.ஐ. போன்ற விசாரணை நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகள், ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இடையேயான மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குளிர்கால கூட்டத்தொடரில் பெரும் புயலை கிளப்பும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com