சர்ச்சைக்குரிய நிலம் நிர்மோகி அகாரா வசம் தான் இருந்தது - அயோத்தி வழக்கில் வக்கீல் வாதம்

அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய நிலம் 1934-ம் ஆண்டு முதல் நிர்மோகி அகாரா வசம் தான் இருந்தது என்று அதன் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடினார்.
சர்ச்சைக்குரிய நிலம் நிர்மோகி அகாரா வசம் தான் இருந்தது - அயோத்தி வழக்கில் வக்கீல் வாதம்
Published on

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை பிரிப்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் தினசரி அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் 11 நாளான நேற்று ராம் லல்லா தரப்பின் வாதம் முடிவடைந்ததை தொடர்ந்து நிர்மோகி அகாரா என்ற இந்து அமைப்பு தரப்பின் வாதங்கள் தொடங்கியது. அதன் சார்பில் வக்கீல் சுஷில் ஜெயின் வாதாடியதாவது:-

அயோத்தி பிரச்சினைக்குரிய பகுதி வரலாற்று ஆவணங்களில் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா தான். அந்த பகுதி அகாரா வசம் தான் இருந்தது. எனவே அதன் உரிமைகள் மறைந்துவிடக்கூடாது.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, நீங்கள் ராம்லல்லாவுக்கு நேர் எதிராக வாதாடுகிறீர்களா? என்பதை தெரிவிக்க வேண்டும் என்றனர்.

சுஷில் ஜெயின் தொடர்ந்து வாதாடுகையில், ராம்லல்லா 1989-ம் ஆண்டு உருவானது. ஆனால் 1934-ம் ஆண்டு முதல் அந்த இடம் அகாரா வசம் இருந்தது. அகாரா அந்த நிலத்தின் உரிமையை கோரவில்லை. ஆனால் அதன்வசம் இருந்த உரிமை மற்றும் ஒரு பக்தராக அதனை நிர்வகிக்கும் உரிமையை கோருகிறது.

நானும் ராமர் கோவிலை மீண்டும் கட்ட வேண்டும் என்ற உரிமையை தான் எதிர்பார்க்கிறேன். நான் வேறு எந்த உரிமையையும் கோரவில்லை. இந்த வழக்கில் உள்ள இதர தரப்புகளும் அகாராவை ஆதரிக்க வேண்டும்.

அந்த இடம் வக்பு சொத்து என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் வக்பு என்பது இந்து வக்பு. அதற்கு மதரீதியான சொத்துகளை வைத்திருக்கும் அல்லது நிர்வகிக்கும் அமைப்பு என்பது தான் அர்த்தம்.

அதற்கு நீதிபதிகள், நீங்கள் அகாராவின் உரிமைகள் தொடர்பான ஆதாரங்களை காட்ட வேண்டும். இதற்கான ஆதாரங்கள் நீங்கள் ஆவணங்களாக காட்டுகிறீர்களா? அல்லது வாய்வழி சாட்சியங்களாக கூறுகிறீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு ஜெயின், என்னிடம் வாய்வழி சாட்சியங்கள் உள்ளன. அதனை மற்றவர்கள் மறுக்கவில்லை. அகாராவின் ஆவணங்கள் கொள்ளை சம்பவத்தில் காணாமல் போய்விட்டன என்றார்.

தொடர்ந்து திங்கட்கிழமை காலையும் அகாரா தரப்பு வாதங்கள் தொடரும் எனக்கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com