

புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதன்பின்னர் கடந்த பிப்ரவரி 2ந்தேதி முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.
இதேபோன்று கடந்த மார்ச் 1ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இணை நோய்களை கொண்டவர்களுக்கும், கடந்த ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடந்தன.
கடந்த மே 1ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று (செவ்வாய் கிழமை) இரவு 7 மணிவரையில் ஒரே நாளில் 54 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.
இதுவரை, நாடு முழுவதும் 92 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.