உத்தரப்பிரதேசம் முழுவதும் வளர்ச்சி அடையும்போது ​​நாடு முன்னேறும்; பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசம் முழுவதும் வளர்ச்சி அடையும்போது ​​நாடு முன்னேறும் என்றும் எனவேதான் அரசின் கவனம் உ.பி.யின் வளர்ச்சியில் உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் முழுவதும் வளர்ச்சி அடையும்போது ​​நாடு முன்னேறும்; பிரதமர் மோடி
Published on

ஷாஜகான்பூர்,

உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் கங்கா விரைவுசாலைக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி இன்று நாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல்-மந்திரி கேவப் பிரசாத் மவுரியா மற்றும் துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதேபோன்று, ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டமும் நிகழ்ச்சியை காண திரண்டிருந்தது.

அதன்பின் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் முன் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசும்போது, மீரட், ஹாப்பூர், புலந்த்சாகர், அம்ரோகா, சம்பல், படான், ஷாஜகான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கார் மற்றும் பிரயாக்ராஜ் நகரங்களை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

600 கி.மீ. தொலைவுடைய நீண்ட விரைவுசாலைக்காக ரூ.36 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. கங்கா விரைவுசாலை இந்த பகுதியில் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வரும் என அவர் கூறியுள்ளார். சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

உத்தரப்பிரதேசம் முழுவதுமாக வளர்ச்சியடையும் போது நாடு முன்னேறும்; எனவேதான் அரசின் கவனம் உ.பி.யின் வளர்ச்சியில் உள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலைகளையும் மற்றும் பல்வேறு புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரும். அடுத்த-தலைமுறைக்கான உட்கட்டமைப்புடன் கூடிய நவீன மாநிலம் ஆக உ.பி. அடையாளம் காணப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

உ.பி.யில் விரைவுசாலைகள், புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருதல், புதிய ரெயில் வழிகள் அமைக்கப்பட்டு வருதல் ஆகிய இணைந்த பணிகள் உ.பி.யின் மக்களுக்கு அடுத்தடுத்து பல்வேறு ஆசிகளை கொண்டு வரும் என கூறியுள்ளார்.

விமான படையின் விமானங்கள் அவசரகாலத்தில் புறப்பட்டு செல்வதற்கும் மற்றும் தரையிறங்கவும் வசதியாக 3.5 கி.மீ. தொலைவுக்கு கட்டுமான பணிகள் நடைபெறும். உ.பி.யில் இன்று காணப்படும் நவீன உட்கட்டமைப்பு ஆனது வளங்கள் எப்படி பயன்படுத்தப்பட்டு உள்ளது என எடுத்து காட்டுகிறது. இதற்கு முன்பு, பொதுமக்களின் பணம் எப்படி பயன்பட்டது என்று நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால் இன்று, உங்கள் பணம் உங்கள் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com