நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நாட்டின் பொருளாதாரம் மோசமான, குழப்பமான நிலையில் இருக்கிறது. ஆனால் இதை சீர்செய்ய மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை. அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருக்கிறது. கொள்கை வழியிலான தீர்வுகளும் காணப்படவில்லை.

பொருளாதார விவகாரத்தில் மத்திய அரசு 10 தோல்விகளை கண்டுள்ளது. ஆட்டோமொபைல் விற்பனையில் ஓராண்டாக 31 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கார்கள் விற்பனை 23 சதவீதமும், இருசக்கர வாகன விற்பனை 12 சதவீதமும், டிராக்டர் விற்பனை 14 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

பங்கு சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மும்பை பங்கு சந்தை 5 சதவீதமும், தேசிய பங்கு சந்தை 10 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

நிதி பற்றாக்குறை அதிகரித்து வரும்நிலையில், அதுபற்றி தவறான புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டது அம்பலம் ஆகியுள்ளது. மத்திய அரசு நிதி பற்றாக்குறை 3.46 சதவீதம் என்கிறது. ஆனால், தணிக்கை குழு மறுமதிப்பீடு செய்து 5.8 சதவீதம் என்று தெரிவித்துள்ளது.

அதுபோல், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த உற்பத்தியை இரட்டை இலக்கத்துக்கு கொண்டு வருவோம் என்று மத்திய அரசு கூறியது. ஆனால், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 5.8 சதவீதம்தான் இருந்துள்ளது. இது, மோடி அரசிலேயே மிகக் குறைந்த அளவாகும். தொழிலாளர் சக்தியும் குறைந்து வருகிறது.

ரியல் எஸ்டேட் துறையில் மந்தநிலை காணப்படுகிறது. கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் வழங்குவதை குறைத்து விட்டன.

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த மாதத்தில், ஆசிய நாடுகளில் உள்ள நாணயங்களில் ரூபாய்தான் மிக மோசமான நிலையில் இருக்கிறது.

அடுத்தபடியாக, அன்னிய நேரடி முதலீடு குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், அன்னிய நேரடி முதலீடு 7 சதவீதம் குறைந்துள்ளது.

அதுபோல், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்ப எடுத்துக்கொண்டு வெளியேறுவதும் நடந்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனர். இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com