‘நாட்டின் கல்விமுறையை மாற்ற வேண்டும்’ - தற்கொலை கடிதத்தில் மாணவர் வேண்டுகோள்

தற்கொலை செய்து கொள்வது குறித்து கடந்த ஒரு வருடமாக திட்டமிட்டு வருவதாக மாணவர் சிவம் துபே தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவம் துபே(வயது 24) என்ற மாணவர் பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த சிவம் துபே, கடந்த வெள்ளிக்கிழமை தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சிவம் துபேயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது அறையை சோதனை செய்தபோது, தற்கொலை செய்வதற்கு முன்பு சிவம் துபே எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது.
அந்த கடிதத்தில் சிவம் துபே, “இந்த கடிதத்தை நீங்கள் படித்துக் கொண்டிருந்தால் நான் உயிரிழந்து விட்டேன் என்று அர்த்தம். தற்கொலை செய்து கொள்வது எனது சொந்த முடிவு. இதில் யாருடைய தலையீடும் இல்லை. இதை கடந்த ஒரு வருடமாக நான் திட்டமிட்டு வருகிறேன்.
எனது உடல் உறுப்புகளை தானம் செய்து விடுங்கள். இந்த நாடு சிறந்த நாடாக மாற வேண்டும் என்றால், முதலில் கல்வி முறையை மாற்ற வேண்டும். நான் இரண்டு ஆண்டுகளாக வகுப்புகளுக்கு செல்லவில்லை. எனது பெற்றோர் செலுத்திய கல்விக் கட்டணத்தை அவர்களிடம் திருப்பி கொடுத்து விடுங்கள்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, தங்கள் மகன் நீண்ட நாட்களாக வகுப்புக்கு வரவில்லை என்பதை கல்லூரி நிர்வாகம் தங்களிடம் தெரியப்படுத்தவில்லை என சிவம் துபேயின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தை பல்வேறு கோணங்களில் இருந்து விசாரித்து வருவதாகவும், மாணவருடன் தொடர்பில் இருந்த அனைவருடனும் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.






