

ஆலப்புழை,
கடந்த 3 நாட்களாக மழையின் வேகம் குறைந்து வருகிறது. இதனால் குடியிருப்புகளை சூழ்ந்திருந்த தண்ணீர் வடிய ஆரம்பித்து விட்டது.
இதையடுத்து நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்களில் சிலர் வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். ஆனால் சில வீடுகளுக்குள் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. அந்த தண்ணீரில் பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் தஞ்சம் அடைந்துள்ளன. இதுவரை பாம்புகள் கடித்ததாக, மாநிலம் முழுவதும் 45 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் ஆலப்புழை மாவட்டம் சாலகுடி பகுதியில் சிலர் நிவாரண முகாம்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு திரும்பினர். அப்போது ஒரு குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்றபோது, முதலை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று வீட்டுக்குள் பதுங்கி இருந்த முதலையை நீண்ட நேரம் போராடி பிடித்தனர். அதன்பிறகே அந்த பகுதியில் உள்ளவர்கள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து அந்த முதலை ஆழப்புழை பகுதியில் கடலில் விடப்பட்டது.
கோட்டயத்தை அடுத்துள்ள செங்கனூர் பகுதியில் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கே அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் குமார், அவருடைய மனைவி அனுபமா, இவர்களுடைய 2 வயது மகள் அனவத்யா ஆகியோர் தங்கி இருந்தனர். அனவத்யாவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் உடல்நிலை மோசமானதை அடுத்து அருகே உள்ள மருத்துவமனையில் அவளை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனவத்யா பரிதாபமாக இறந்தாள்.
ஆலுவா, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீர் வடிய ஆரம்பித்து விட்டது. மழையின் தீவிரம் குறைந்ததால் இடுக்கி அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதையடுத்து அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டன. மாநிலத்தில் திருவனந்தபுரம், ஆலுவா, கோட்டயம், மலப்புரம், எர்ணாகுளம், ஆலப்புழா ஆகிய நகரங்களில் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.
நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைத்தாலும் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக இதயநோய், தொற்றுநோய், சர்க்கரைநோய் உள்ளிட்டவைகளுக்கு மருந்துகள் கிடைக்காமல் முகாம்களில் தங்கி உள்ளவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு மருந்து, மாத்திரைகளை அதிக அளவு அனுப்பி வைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூணாறில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். அதன்படி ஒரு நாளைக்கு ஒரு இருசக்கர வாகனத்துக்கு 2 லிட்டர் பெட்ரோலும், கார், ஆட்டோ, லாரிக்கு தலா 4 லிட்டர் டீசலும் மட்டுமே வழங்கப்படுகிறது.