‘நாட்டின் தற்போதைய நிலை எமர்ஜென்சி காலத்தை விட மோசமாக உள்ளது’ - லல்லு பிரசாத் யாதவ்


‘நாட்டின் தற்போதைய நிலை எமர்ஜென்சி காலத்தை விட மோசமாக உள்ளது’ - லல்லு பிரசாத் யாதவ்
x

பா.ஜ.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வாக்காளர்களின் உரிமையை பறிக்க முயற்சிப்பதாக லல்லு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

பாட்னா,

பா.ஜ.க.வுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் முறைகேடு நடந்ததாக கூறிய அவர், பெங்களூரு மத்திய தொகுதியில் நடந்த முறைகேடு குறித்த தரவுகளையும் வெளியிட்டு இருந்தார்.

இதற்கிடையே சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி வரும் பீகாரில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராக ராகுல் காந்தி தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக பீகாரில் ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ என்ற பெயரில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்ள உள்ளார். பீகாரின் சசாரம் என்ற இடத்தில் இன்று தொடங்கும் இந்த யாத்திரையில் ‘மகாகத்பந்தன்’ கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாநிலம் முழுவதும் 16 நாட்களாக 1,300 கி.மீ. தூரம் நடைபெறும் இந்த யாத்திரை அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி தலைநகர் பாட்னாவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.

இந்த யாத்திரையில் பீகாரின் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் கலந்து கொள்கிறார். இதற்காக தனது மகன் தேஜஸ்வி யாதவுடன் சசாரம் பகுதிக்கு புறப்பட்ட அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது லல்லு பிரசாத் யாதவ் கூறியதாவது;-

“ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஒவ்வொரு வாக்காளருக்கும், வாக்களிக்கும் உரிமையை அரசியலமைப்பு உறுதி செய்கிறது. பா.ஜ.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்த உரிமையை பறிக்க முயற்சிக்கின்றன. அது நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இந்த யாத்திரையில் பீகார் மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவோம் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். நாட்டின் தற்போதைய நிலை எமர்ஜென்சி காலத்தை விட மோசமாக உள்ளது. இந்த போராட்டத்தில் ராகுல் காந்தியும் எங்களுடன் இருப்பது நல்ல விஷயம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story