காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது - மாநிலங்களவையில் அ.தி.மு.க. வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க. வலியுறுத்தியது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது - மாநிலங்களவையில் அ.தி.மு.க. வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன், பல்வேறு பிரச்சினைகளை உறுப்பினர்கள் எழுப்பினர். அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.நவநீத கிருஷ்ணன், காவிரி பிரச்சினையை எழுப்பினார்.

அவர் பேசியதாவது:-

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான திட்ட அறிக்கையையும் தயாரித்து விட்டது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இப்பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும். அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதாதள உறுப்பினர் மனோஜ் ஜா கேட்டுக்கொண்டார்.

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் தெரிவித்தார்.

10 கோடி ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ உதவி அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்த 23 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே மக்களவையில் கூறினார். இவற்றில், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் அடங்கும் என்று அவர் கூறினார்.

பீகாரில் 100 குழந்தைகளுக்கு மேல் பலி கொண்ட மூளை காய்ச்சலை ஒழிக்க மத்திய அரசு நீண்டகால திட்டத்தை அமல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அளிக்கும் தொகையை உயர்த்தும் யோசனை இல்லை என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி நரேந்தர் சிங் தோமர் மாநிலங்களவையில் கூறினார். ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களுக்காக ரூ.3 ஆயிரத்து 800 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com