தேசிய கல்வி கொள்கை ரத்து முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்

தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
தேசிய கல்வி கொள்கை ரத்து முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்
Published on

பெங்களூரு:-

முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

போட்டி போடுவார்கள்

மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப தயாரித்துள்ளது. இந்த கல்வி கொள்கையின் வரைவு அறிக்கைக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு ஒப்புதல் வழங்கியது. அந்த கல்வி கொள்கை குழுவின் தலைவராக கஸ்தூரிரங்கன் செயல்பட்டார். இந்த கல்வி கொள்கையை நாங்கள் கர்நாடகத்தில் அமல்படுத்தினோம்.

ஆனால் தற்போது புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசு, இந்த கல்வி கொள்கையை வருகிற கல்வி ஆண்டு முதல் ரத்து செய்வதாக கூறி உள்ளது. இதன் மூலம் பள்ளி குழந்தைகளின் எதிர்காலத்துடன் இந்த அரசு விளையாடுகிறது. பிற மாநிலங்களில் இந்த கல்வி கொள்கை அமலில் இருக்கும். அவ்வாறு இருக்கும்போது நமது மாநிலத்தில் அந்த கொள்கையை பின்பற்றாவிட்டால், நமது குழந்தைகள் மற்றவர்களுடன் எப்படி போட்டி போடுவார்கள்.

நல்ல எதிர்காலம்

அரசின் முடிவால் கிராமப்புற மாணவர்களுக்கு பெரிய பின்னடைவு ஏற்படும். சித்தராமையா குழந்தைகளின் நல்ல எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும். அனைத்தையும் மஞ்சள் காமாலை கண்ணால் பார்க்கக்கூடாது. அதனால் சித்தராமையா இந்த விஷயத்தில் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பா.ஜனதா மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.

எங்கள் ஆட்சியில் நடைபெற்ற திட்ட பணிகள் குறித்து விசாரணை நடத்துவதாக சித்தராமையா கூறினார். இதை சொல்லி 3 மாதங்கள் ஆகிவிட்டது. சில விசாரணை அறிக்கைகள் வந்துள்ளன. அதில் எந்த தவறும் நடைபெறவில்லை என்று தெரியவந்துள்ளது. காங்கிரசில் இருப்பவாகள் எல்லாம் அரிச்சந்திரர்களா?. காங்கிரஸ் ஊழல் மலிந்த, மக்கள் விரோத ஆட்சியை நடத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் எத்தனை பேர் சிறையில் உள்ளனர்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com