'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி; டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

‘அக்னிபத்’ திட்டம் தேசநலன் கருதி உருவாக்கப்பட்டது என்று கூறிய டெல்லி ஐகோர்ட்டு, அத்திட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது.
'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி; டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
Published on

போராட்டங்கள்

மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் 14-ந் தேதி 'அக்னிபத்' திட்டத்தை தொடங்கியது. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய இத்திட்டம் தொடங்கப்பட்டது.

ஒப்பந்த அடிப்படையில், முப்படைகளுக்கு ஆள் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. இருப்பினும், திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. எனவே, அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டன.

மத்திய அரசு வாதம்

தலைமை நீதிபதி சதீஷ்சந்திர சர்மா தலைமையிலான அமர்வு முன்பு இம்மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜஸ்வர்யா பட்டி, வக்கீல் ஹரிஷ் வைத்தியநாதன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள், பாதுகாப்புத்துறை ஆள்தேர்வில் 'அக்னிபத்' திட்டம் மிகப்பெரிய கொள்கை மாற்றம் என்றும், வல்லுனர்களால் இத்திட்டம் வகுக்கப்பட்டதாகவும் கூறினர். ஆள் தேர்வில் அளிக்கப்பட்ட வயது தளர்வால், 10 லட்சம் இளைஞர்கள் பலன் அடைவார்கள் என்றும் தெரிவித்தனர்.

மனுதாரர்கள் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.

தேசநலன் கருதி உருவாக்கப்பட்டது

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கடந்த டிசம்பர் 15-ந் தேதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்தநிலையில், தள்ளிவைக்கப்பட்ட தீர்ப்பை நீதிபதிகள் நேற்று அளித்தனர். 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

அவர்கள் கூறியதாவது:-

தேசநலன் கருதி, 'அக்னிபத்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்திட்டம், ஆயுதப்படைகள் பலம் பொருந்தியவையாக இருப்பதை உறுதி செய்யும். எனவே, இவ்விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com