கட்சியில் இருந்து மூத்த மகன் அஜய் சிங் சவுதாலா நீக்கம் : ஓம் பிரகாஷ் சவுதாலா நடவடிக்கை

வாரிசு சண்டை எதிரொலியாக கட்சியில் இருந்து மூத்த மகன் அஜய் சிங் சவுதாலாவை நீக்கி ஓம் பிரகாஷ் சவுதாலா நடவடிக்கை எடுத்துள்ளார்.
கட்சியில் இருந்து மூத்த மகன் அஜய் சிங் சவுதாலா நீக்கம் : ஓம் பிரகாஷ் சவுதாலா நடவடிக்கை
Published on

சண்டிகார்,

இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவரும், அரியானா மாநில முன்னாள் முதல்மந்திரியுமான ஓம் பிரகாஷ் சவுதாலா ஆட்சியில் இருந்த போது ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்றார். அவருடைய மூத்த மகன் அஜய் சிங் சவுதாலாவும் இந்த வழக்கில் சிக்கினார். இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இளைய மகன் அபே சவுதாலா எதிர்க்கட்சி தலைவராக இருந்து கட்சியை நிர்வகித்து வருகிறார். ஆனால் அவருடைய தலைமையை எதிர்த்து அஜய் சிங் சவுதாலாவின் மகன்களான துஷ்யந்த் சவுதாலா எம்.பி., திக்விஜய் சவுதாலா ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் ஓம் பிரகாஷ் சவுதாலா சிறையில் இருந்தபடியே அஜய் சிங் சவுதாலாவின் 2 மகன்களையும் கட்சியில் இருந்து 2ந்தேதி நீக்கினார்.

இந்நிலையில் சிறையில் இருந்து பரோலில் வந்த அஜய் சிங் சவுதாலா, தன் மகன்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். மேலும் 17ந் தேதி இந்திய தேசிய லோக்தளம் கட்சி அறிவித்துள்ள செயற்குழு கூட்டத்துக்கு எதிராக போட்டி கூட்டத்துக்கு அஜய் சிங் சவுதாலா அழைப்பு விடுத்தார். வாரிசு சண்டையால் அதிருப்தி அடைந்த ஓம் பிரகாஷ் சவுதாலா சிறையில் இருந்தவாறே அஜய் சிங் சவுதாலாவையும் கட்சியில் இருந்து நீக்கி நேற்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com