மோடியின் செல்வாக்கால் ராகுல் அச்சம் - பியூஷ் கோயல்

தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸுக்கு தைரியம் இல்லை என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
 பியூஷ் கோயல்
Published on

மும்பை,

"ஜென் சி' எப்போதும் பாஜக பக்கம் தான்; இளைஞர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு உண்டு என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட 'போதைப்பொருள் இல்லாத இளைஞர்களுக்கான விக்ஸித் பாரத் சங்கல்ப் அபியான்' திட்டத்தை மும்பையில் தொடங்கி வைத்த பின் மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, போதைப்பொருளுக்கு எதிரான இந்தக் கூட்டுப் போராட்டத்தில் இளைஞர்களும் இளம் பெண்களும் இணைவார்கள் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்; இப்பகுதி முழுவதையும் போதைப்பொருள் இல்லாததாக மாற்றும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் வட மும்பையில் உள்ள நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.

ராகுலுக்கு அச்சம்

பிரதமர் மோடிக்கு இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இதைக் கண்டு எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், தன்னை ஒரு இளைஞர் என்று காட்டிக் கொள்ளும் ராகுலுக்கு, தற்போது இளைஞர்கள் மத்தியில் எந்த ஈர்ப்பும் இல்லை. இளைஞர்களின் ஆதரவு தொடர்ந்து பாஜகவிற்கே உள்ளது. குறிப்பாக, ஜென்ஸி (Gen Z) எப்போதும் எங்களுடனே இருக்கிறார்கள்.

ஜென்ஸி தலைமுறையின் ஆதரவும் இளைஞர்களின் சக்தியும் இல்லாமல் பிரதமரால் மூன்று முறை வெற்றி பெற்றிருக்க முடியாது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் துணை நிற்கிறார்கள் என்பதில் நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்..

பிரதமர் மோடிக்கு இளைஞர்கள் ஆதரவு

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை இளைஞர்கள் தொடர்ந்து ஆதரிக்கின்றனர். பிரதமர் மோடி உலகளவில் மிகவும் பிரபலமான தலைவராக இருக்கிறார். இளைஞர்களுடனான அவரது தொடர்பும், சமூக வலைதளங்களில் அவரது இருப்பும் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கடந்த 2010-11ம் ஆண்டிலேயே வினாத்தாள் கசிவு தொடர்பான சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டது. ஆனால் அதை அறிமுகப்படுத்தும் தைரியம் அவர்களுக்கு இல்லை. ஆனால், 2024ல் இந்த சட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டு வந்தது. தற்போது, அந்த சட்டத்திற்கு வலுசேர்க்கும் சாராம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com