முக கவசம், தனி மனித இடைவெளி பின்பற்றி இந்தியாவில் 2 லட்சம் கொரோனா இறப்புகளை தடுக்க முடியும் - ஆய்வில் பரபரப்பு தகவல்

இந்தியாவில் முக கவசம் அணிந்தும், தனி மனித இடைவெளியை பின்பற்றியும் கொரோனாவால் ஏற்படும் 2 லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் என ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
முக கவசம், தனி மனித இடைவெளி பின்பற்றி இந்தியாவில் 2 லட்சம் கொரோனா இறப்புகளை தடுக்க முடியும் - ஆய்வில் பரபரப்பு தகவல்
Published on

புதுடெல்லி,

சீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இந்தியாவில் ஜனவரியில் பரவத்தொடங்கியது. கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி இந்தியாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு நேரிட்டது. இந்த 8 மாத காலத்தில் இங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (ஐ.எச்.எம்.இ.) ஒரு ஆய்வை நடத்தி உள்ளது. இந்த ஆய்வில் கொரோனாவால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை மேலும் கட்டுப்படுத்த ஒரு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* இந்திய மக்கள், பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் முக கவசத்தை அணிந்து வரவேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்றி வரவேண்டும், இன்ன பிற தடுப்பு வழிமுறைகளையும் கடைப்பிடித்து வரவேண்டிய தேவை உள்ளது.

* ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து தளர்த்தி, முக கவசம் அணிவது தற்போதைய அளவில் இருந்தால் டிசம்பர் 1-ந் தேதிக்குள் இந்தியாவில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 380 இறப்புகளை எதிர்பார்க்கலாம். 13 மாநிலங்களில் தலா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை கொண்டிருக்கும்.

* இந்தியாவில் பரவலாக முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிறபோது, டிசம்பர் 1-ந் தேதிக்குள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகளை தடுக்க முடியும். இவ்விரு செயல்களும், கொரோனா பரவலை தணிப்பதில் முக்கியமானது.

* டிசம்பர் 1 வரை இந்தியாவில் கொரோனாவால் 2 லட்சத்து 91 ஆயிரத்து 145 பேர் இறக்ககூடும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ஆய்வு முடிவு பற்றி அரியானா அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கவுதம் மேனன் கருத்து தெரிவிக்கையில், முக கவசம் அணிவதும், தனி மனித இடைவெளியை பின்பற்றுவதும், நோய் தாக்கத்தின் முன்னேற்றத்தை கணிசமாக குறைக்கும் என்பது உண்மை என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com