சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
Published on

புதுடெல்லி,

சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. நேரமும் வீணாகிறது.

எனவே, இப்பிரச்சினையை தவிர்க்க மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறை, கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கிடைக்கும். குறிப்பிட்ட தொகை செலுத்தி அந்த ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில் ஒட்டிக்கொள்ள வேண்டும்.

சுங்கச்சாவடிகளை வாகனம் கடக்கும்போது, சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்துக்கான கட்டணம் தானியங்கி முறையில் கழித்துக்கொள்ளப்படும். இதனால், சுங்கச்சாவடிகளில் நிற்காமல் பயணத்தை தொடரலாம். பாஸ்டேக் முறைக்கு வாகன உரிமையாளர்கள் மாறுவதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில், இதை கட்டாயம் ஆக்குவதற்கான தேதி அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் பாஸ்டேக் முறை கட்டாயம் ஆக்கப்படுவதாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து இருந்தது.

அதன்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது. பாஸ்டேக் இல்லாமல் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com