கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தியை மாதத்திற்கு 10 கோடியாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு

கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தியை ஒரு மாதத்திற்கு 10 கோடி என்ற அளவுக்கு அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தியை மாதத்திற்கு 10 கோடியாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க, கோவிட் சுரக்ஷா என்ற திட்டமொன்றை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்தியாவில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசி கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் பொதுமக்களின் உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாத நிலையில், இதன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க, கூடுதல் நிதி வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக, பெங்களூருவில் செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு 65 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. மும்பையில் செயல்படும் ஹெப்கின் பயோ பார்மாசூடிக்கல், ஐதராபாத்தில் இயங்கும் இந்தியன் இம்யூனோலாஜிக்கல், பல்சந்தரில் உள்ள பாரத் இம்யூனோலாஜிக்கல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும், இதற்கான உதவிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட உள்ளன.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 60 முதல் 65 கோடி ரூபாய் வரை நிதியுதவி அளித்து, மாதத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், செப்டம்பர் மாத இறுதிக்குள், ஒரு மாதத்திற்கு 10 கோடி தடுப்பூசிகள் அளவுக்கு உற்பத்தியை அதிகரிப்பது என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com