தேர்வுகள் நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டது

தேர்வுகள் நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
தேர்வுகள் நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டது
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமாக இருந்து வரும் நிலையில், தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 2-ந்தேதி சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில் சில மாற்றங்கள் செய்து திருத்தி அமைக்கப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அந்த அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தேர்வு எழுத வரும் மாணவருக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவரை அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு அனுப்பி வைப்பதோடு, அவர் வேறு வழியில் தேர்வு எழுதவோ அல்லது அந்த மாணவர் முழு உடல் தகுதி பெற்ற பிறகு வேறொரு தேதியில் அவர் தேர்வு எழுதவோ பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* தேர்வு எழுத வரும் மாணவர்கள் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். கையை சுத்தம் செய்யும் கிருமி நாசினி, சோப்பு போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* தேர்வு நடைபெறும் அறைக்குள் இருக்கும் நேரம் முழுவதும் முக கவசம் அணிந்து இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

* தேர்வு நடத்தும் பணியில் ஈடுபடுபவர்களும் தேர்வு எழுதுபவர்களும் தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் தங்கள் உடல்நிலை குறித்த சுய விவரத்தை தாக்கல் செய்ய வழிவகை செய்ய வேண்டும். இதற்கான படிவத்தை ஹால் டிக்கெட் வழங்கும் சமயத்திலேயே கொடுக்கலாம்.

* சுய விவரத்தை தாக்கல் செய்யாதவர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்கக்கூடாது.

* நோய்த்தொற்று அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.

* தேர்வு மையத்தில் அதிக அளவில் கூட்டம் சேராத வகையில் அதிகாரிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

* நோய் கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையங்கள் செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது.

* பேனா, காகிதங்கள் அடிப்படையிலான தேர்வுகள் என்றால் கேள்வித்தாள், விடைத்தாள் ஆகியவற்றை வழங்கும் முன் தேர்வு கண்காணிப்பாளர் கிருமி நாசினி கொண்டு தனது கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். எச்சில் தொட்டு அவற்றை எடுத்துக் கொடுப்பதை அனுமதிக்கக்கூடாது. இதேபோல் மாணவர்களும் அவற்றை வாங்கும் முன் தங்கள் கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

* எழுதப்பட்ட விடைத்தாள்களை சேகரித்து கட்டாக கட்டி அனுப்பும் முன்பும் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com