

புதுடெல்லி,
கொரோனாவை உறுதியாக கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இந்த நெறிமுறைகள், ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து 30-ந்தேதிவரை நாடு முழுவதும் அமலில் இருக்கும்.
கடந்த 5 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தது. அந்த பலன்களை தொடர செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம். அதற்காக, கொரோனா நோயாளிகளை அடையாளம் காணுதல், பரிசோதனை செய்தல், சிகிச்சை அளித்தல் என்ற விதிமுறைகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அதிகமான பரிசோதனை
அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை குறைவாக இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அந்த சோதனைகளை அதிகரிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட 70 சதவீத அளவுக்கு பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்த தீவிர பரிசோதனையால் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகள், உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் உடனடியாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில், கட்டுப்பாட்டு பகுதிகள் வரையறுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களும், மாநில அரசுகளும் கட்டுப்பாட்டு பகுதிகள் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதை மத்திய சுகாதார அமைச்சகமும் பகிர்ந்து கொள்ளும்.
வீடு வீடாக கண்காணிப்பு
கட்டுப்பாட்டு பகுதிக்குள் வீடு வீடாக கண்காணிக்கும் பணியை செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது மாவட்ட, போலீஸ் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் பொறுப்பாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
பணி இடங்கள், பொது இடங்கள் மற்றும் நெரிசலான இடங்களில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
அபராதம்
முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்றும்வகையில் மாநில அரசுகள் அபராதம் விதிக்கலாம். கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான தேசிய அளவிலான உத்தரவுகள் நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டும்.
கள நிலவரத்தை ஆய்வு செய்து, மாவட்ட அளவிலோ, நகர அளவிலோ அல்லது வார்டு அளவிலோ கூட உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
அதே சமயத்தில் மாநிலங்களுக்கு இடையிலோ அல்லது மாநிலத்துக்கு உள்ளேயோ தனிநபர்கள் பயணம் செய்ய தடை விதிக்கக்கூடாது. பொருட்களை கொண்டு செல்லவும் கட்டுப்பாடு கூடாது. இதற்கு தனியாக இ-பாஸ் வாங்க தேவையில்லை.
கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ரெயில் போக்குவரத்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை தொடர்ந்து இயங்கலாம்.
தடுப்பூசி
உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் சில மாநிலங்களில் தடுப்பூசி பணி மெதுவாக நடப்பது கவலை அளிக்கிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க தடுப்பூசி மிகவும் முக்கியம்.
ஆகவே, எல்லா மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அனைத்து முன்னுரிமை பயனாளிகளுக்கும் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.