திருடுவதற்காக நிறுவனம் நடத்திய கும்பல்.. மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம்

கர்நாடகாவில் திருடுவதற்காக நிறுவனம் நடத்திய கும்பல் சிக்கியது.
திருடுவதற்காக நிறுவனம் நடத்திய கும்பல்.. மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம்
Published on

பெங்களூரு,

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலை தேடி வாலிபர்கள் நடையாய் நடந்து வருகிறார்கள். ஆனாலும் பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைத்தபாடில்லை. பல ஆண்டுகளாக வேலை தேடியும் கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் சிலர் திருட்டில் ஈடுபட்டு சிக்கி கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

ஆனால் இங்கே கொஞ்சம் புதுசா யோசித்த சிலர், திருடுவதற்காகவே நிறுவனம் நடத்தி வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் அந்த நிறுவனம் திருடுவதற்காக மாதம் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்து வந்துள்ள தகவலும் தெரியவந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், பெங்களூரு பசவேசுவராநகரை சேர்ந்த வெங்கடேஷ், ராகவேந்திரா, வினேஷ் பட்டீல் என்று தெரிந்தது. இவர்களில் வெங்கடேஷ் திருட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். அங்கு ராகவேந்திரா வேலை செய்துள்ளார். இவர்கள் திருடும் பொருட்களை வினேஷ் பட்டீல் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதாவது துமகூரு மாவட்டத்தில் கேபிள் வயர்களை திருடுவது தான் வெங்கடேஷ், ராகவேந்திராவின் வேலை ஆகும். இந்த கேபிள் வயர்களை திருடுவதற்காக ராகவேந்திராவுக்கு வெங்கடேஷ் மாத சம்பளமாக ரூ.20 ஆயிரம் கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் கொரட்டகெரே அருகே வட்டரகெரே கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கேபிள் வயர்கள் திருட்டு போய் இருந்தது.

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் வெங்கடேஷ், ராகவேந்திரா உருவம் பதிவாகி இருந்தது. அதன்மூலம் அவர்களை போலீசார் கைது செய்திருந்தார்கள். அவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் கேபிள் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 3 பேர் மீதும் கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com