

மும்பை,
மராட்டியத்தில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் அவுரங்காபாத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டார். இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று புனேயில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து பேசினார். சந்திப்புக்குபிறகு அவர் கூறியதாவது:-
பலத்த மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் இந்த நிலையில் இருந்து மீண்டு வர அரசு உறுதியான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் தற்போது உள்ள அரசு அதுபோன்ற உறுதியான நடவடிக்கையை எடுக்காமல் உள்ளது.
மத்திய அரசும் களத்துக்கு வந்து பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. தற்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசு கண்டிப்பாக நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனில் நாங்கள் அதற்காக போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.