2019-2021ல் குடியுரிமையை துறந்த இந்தியர்கள் எண்ணிக்கையை வெளியிட்ட அரசு

2019 முதல் 2021 வரையிலான 3 ஆண்டுகளில் குடியுரிமையை துறந்த இந்தியர்கள் எண்ணிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் இன்று வெளியிட்டார்.
2019-2021ல் குடியுரிமையை துறந்த இந்தியர்கள் எண்ணிக்கையை வெளியிட்ட அரசு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடர் ஆகஸ்டு மாதம் 12ந்தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் 18 அமர்வுகள் இடம்பெறும் என கூறப்பட்டு உள்ளது.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதேநேரம் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபத் திட்டம், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வு ஆகிய விவகாரங்களை இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய், இந்தியாவில் கடந்த 2019, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் முறையே 1,44,017, 85,256 மற்றும் 1,63,370 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் (2017 முதல் 2022 வரை), 5,220 வெளிநாட்டவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. அவர்களில் 4,552 பேர் பாகிஸ்தானியர்கள் ஆவர். இது 87% ஆகும்.

கடந்த நவம்பரில் மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் கூறும்போது, 5 ஆண்டுகளில் 6 லட்சத்து 8 ஆயிரத்து 162 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என தெரிவித்து உள்ளார். இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 1 லட்சத்து 21 ஆயிரத்து 632 பேர் இந்திய குடியுரிமையை வேண்டாம் என கைவிடுகின்றனர். ஆனால், 5 ஆண்டுகளில் சராசரியாக 1,044 பேரே இந்திய குடியுரிமையை பெற்றுள்ளனர்.

அமெரிக்க குடியுரிமையை பெறுவதே இந்தியர்களில் பலரது விருப்பம் ஆகவுள்ளது. இதேபோன்று மறுமுனையில் இந்திய குடியுரிமை பெறும் அமெரிக்கர்களும் உள்ளனர். ஆனால், அது மிக சிறிய எண்ணிக்கையில் உள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com