கிரேட் நிகோபார் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை நசுக்கும் தவறான சாகசம் - ராகுல் காந்தி

கிரேட் நிகோபார் திட்டத்தால் தீவில் உள்ள பூர்வகுடி மக்கள் புலம்பெயர நேரிடும் என்று பழங்குடியினர் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
அந்தமான் - நிகோபார் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபார் தீவு அமைந்துள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தை அந்தமான் - நிகோபார் தீவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கழகம் மேற்கொள்ள உள்ளது.
கிரேட் நிகோபார் திட்டத்தின் கீழ், கிரேட் நிகோபாரில் துறைமுகம், சர்வதேச விமான நிலையம், சிறு நகர்ப்பகுதி, 160 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவு கொண்ட மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இதற்காகப் பயன்படுத்த உள்ள நிலத்தில் நிகோபாரீஸ், ஷோம்பென்ஸ் ஆகிய பழங்குடியின மக்கள் வாழும் சுமார் 130 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பழைமையான காடும் அடங்கும்.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கிரேட் நிகோபார் தீவில் உள்ள பூர்வகுடி மக்கள் புலம்பெயர நேரிடும் என்றும், முக்கியமாக சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள், பழங்குடியினர் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், இந்த திட்டத்தால் நிகோபார் தீவு மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படவிருக்கும் பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி எழுதியிருக்கும் கட்டுரையை மேற்கோள்காட்டி, "கிரேட் நிகோபார் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை நசுக்கும் தவறான சாகசம், சட்ட செயல்முறையைக் கேலி செய்யும் செயலாகும்" என்று ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தக் கட்டுரையின் மூலம், காங்கிரஸ் மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி, இந்தத் திட்டத்தால் நிக்கோபாரின் மக்களுக்கும் அதன் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துக்காட்டுகிறார் என்று அதில் கூறியுள்ளார்.






