மருத்துவ உலகில் அதிசயம்; 9 வயது சிறுமியின் கை 15 வயது சிறுமிக்கு பொருத்தம்

கை தந்த ரியாவின் அண்ணன் ஷிவமிற்கு 'ராக்கி' கயிறு கட்டி தனது நன்றியையும் பாசத்தையும் வெளிப்படுத்தினார் அனம்தா அகமது.
மருத்துவ உலகில் அதிசயம்; 9 வயது சிறுமியின் கை 15 வயது சிறுமிக்கு பொருத்தம்
Published on

மும்பை,

மின்சார விபத்தில் கையை இழந்த மும்பைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, மூளைச்சாவு அடைந்த 9 வயது சிறுமியின் கை வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு புதிய மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக இளம் வயதில் தோள்பட்டை அளவிலான கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெருமையை இச்சிகிச்சை பெற்றுள்ளது.

விபத்தும் துயரமும்

மும்பை குர்லா பகுதியைச் சேர்ந்த அனம்தா அகமது என்ற சிறுமி. அவர் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது 13-வது வயதில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு சென்ற 11,000 (கேவி) உயர் அழுத்த மின்சாரக் கம்பியைத் தொட்டதில், அவரது வலது கை முற்றிலும் கருகி, அழுகிய நிலைக்குச் சென்றது. இதனால் மருத்துவர்கள் அவரது வலது கையைத் தோள்பட்டை வரை துண்டித்து அகற்றினர்.

துளிர்விட்ட நம்பிக்கை

இருப்பினும், மனம்தளராத அனம்தா தனது இடது கையால் எழுதப் பழகி, அண்மையில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். அவருக்குப் புதிய கை பொருத்த மும்பை க்ளெனீகிள்ஸ் ஆஸ்பத்திரியில் பதிவு செய்து காத்திருந்தனர்.

மறுவாழ்வு தந்த ரியா

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரியா மிஸ்திரி என்ற 9 வயது சிறுமி, மூளை ரத்தக்கசிவு காரணமாக மூளைச்சாவு அடைந்தார். மகளை இழந்த சோகத்திலும் அவரது பெற்றோர் உறுப்பு தானத்திற்குச் சம்மதித்தனர். அதன்படி, சிறுமி ரியாவின் வலது கை அதிநவீன குளிரூட்டும் வசதியுடன் உடனடியாக மும்பை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.

ஆஸ்பத்திரியின் மூத்த பிளாஸ்டிக் மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிலேஷ் சத்னி தலைமையிலான மருத்துவக் குழுவினர், சுமார் 12 மணி நேரம் தொடர்ந்து போராடி, ரியாவின் கையை அனம்தாவின் தோள்பட்டையோடு வெற்றிகரமாக இணைத்தனர். இரத்த நாளங்கள், எலும்புகள் மற்றும் நரம்புகள் மிகவும் துல்லியமாக இணைக்கப்பட்டன.

பாசப் பிணைப்பு

சிகிச்சைக்குப் பின் நலம் பெற்று வரும் அனம்தா, மத எல்லைகளைக் கடந்து தனக்குக் கை கொடுத்த ரியா மிஸ்திரியின் குடும்பத்தைத் தனது சொந்தக் குடும்பமாக ஏற்றுக்கொண்டார். மேலும், தான் புதிதாகப் பெற்ற கையின் மூலமாகவே, ரியாவின் அண்ணன் ஷிவமிற்கு 'ராக்கி' கயிறு கட்டி தனது நன்றியையும் பாசத்தையும் வெளிப்படுத்தினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் நெகிழ வைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com