வரலாற்று சிறப்புமிக்க பெங்களூரு கடலைக்காய் திருவிழா தொடங்கியது

வரலாற்று சிறப்புமிக்க பெங்களூரு பசவனகுடி கடலைக்காய் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க பெங்களூரு கடலைக்காய் திருவிழா தொடங்கியது
Published on

பசவனகுடி:

கடலைக்காய் திருவிழா

பெங்களூரு பசவனகுடி பகுதியில் தொட்ட கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கடலைக்காய் திருவிழா வரலாற்று சிறப்புமிக்கதாகும். கடலைக்காய் திருவிழாவின் போது தொட்ட கணபதிக்கு கடலைக்காயால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலைக்காயை வாங்கி வந்து சாமி முன்பு வைத்து பூஜை செய்து அதை வீட்டிற்கு எடுத்து செல்வார்கள்.இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கடலைக்காய் திருவிழா நவம்பர் 20-ந் தேதி (அதாவது நேற்று) தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று வரலாற்று சிறப்புமிக்க பசவனகுடி கடலைக்காய் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த கடலைக்காய் திருவிழாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று மாலை தொடங்கி வைத்தார்.

சிறப்பு பூஜை

மேலும் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திராவை சேர்ந்த வியாபாரிகளும் கோவில் முன்பு கடை அமைத்து கடலைக்காய் வியாபாரத்தில் ஈடுபட்டனர். கடலைக்காய் கடைகளை தவிர உணவு பொருட்கள் கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று காலை முதலே கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த உணவு பொருட்கள் உள்பட பல்வேறு கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

பொதுமக்கள் கடலைக்காயை வாங்கி தொட்ட கணபதி முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்தனர். கடலைக்காய் திருவிழாவையொட்டி ராட்சத ராட்டினங்கள், சிறுவர்களை மகிழ்விக்கும் விளையாட்டுகள் என பொருட்காட்சி போல அமைக்கப்பட்டிருந்தது.

கடலைக்காய் திருவிழாவுக்கு வந்த மக்கள், ராட்டினங்களில் சென்று மகிழ்ந்தனர். குழந்தைகளும் குதூகலமாயினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com