

புதுடெல்லி,
கடற்கரை மற்றும் அதற்கு வெளியே நிறுவப்படும் எண்ணெய், கியாஸ் ஆய்வு மற்றும் தயாரிப்பு திட்டங்கள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில் ஏ பிரிவு திட்டமாக முதலில் இருந்தன. இதில், கடந்த 16-ந்தேதி திருத்தம் செய்யப்பட்டு, மேற்கண்ட திட்டங்கள் பி2 பிரிவுக்கு மாற்றப்பட்டது.
ஏ பிரிவில் உள்ள திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களின் கருத்துகளை கேட்க வேண்டியது அவசியம். அதைப்போல ஆய்வுப்பணிகளுக்கு முன்பாக சுற்றுச்சூழல் அனுமதியையும் பெற வேண்டும். ஆனால் பி2 பிரிவில் உள்ள திட்டங்களை செயல்படுத்த நிபந்தனைகள் இல்லை.
இந்த காரணத்தால் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு திட்டங்களை செயல்படுத்த எந்த தடையும் இல்லாத நிலை ஏற்பட்டது. இதற்கு விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், இந்த விவகாரத்தை பிரதமரின் கவனத்துக்கு கடிதம் வாயிலாக கொண்டு சென்றார்.
இந்தநிலையில், டெல்லியில் நேற்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தமிழக செய்தியாளர்களை தனது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். இறக்குமதி வெங்காயத்தை மக்கள் விரும்பாததால் வெங்காயம் விலை வேகமாக குறையவில்லை. ஆனால் விரைவில் விலை குறைந்து விடும் என்றார்.
அப்போது அவரிடம் சில நிருபர்கள், ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பிரகாஷ் ஜவடேகர், எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வுகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது இல்லை என்ற எங்கள் கொள்கை முடிவு வெளிப்படையானது. இதில் மறு பரிசீலனை செய்ய எதுவும் இல்லை என்று கூறினார்.