மேகதாது அணை கட்டும் பிரச்சினை: வரைவு அறிக்கை தயாரிக்க அனுமதி அளிப்பதா?, மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்தது

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக செயல்திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்ததை எதிர்த்து, மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது.
மேகதாது அணை கட்டும் பிரச்சினை: வரைவு அறிக்கை தயாரிக்க அனுமதி அளிப்பதா?, மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்தது
Published on

புதுடெல்லி,

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வருகிறது.

இந்தநிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு சார்பில் தாக்கல் செய்த சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் கடந்த 22-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

மேலும் இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படியும் கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறைக்கு மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் மேகதாது பகுதியில் புதிய அணைக்கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மேகதாது பகுதியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு, டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு பல ஆண்டுகளாக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் திட்ட மதிப்பீட்டு இயக்குனரகம், கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து செயல் திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கூறி உள்ளது.

இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானதாகும். எனவே, மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான செயல்திட்ட வரைவு அறிக்கையை கர்நாடக அரசு தயாரிக்க, மத்திய நீர்வளத்துறை ஆணையம் அளித்துள்ள ஒப்புதலுக்கு தடை விதிக்கவேண்டும். அத்துடன் இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை ஆணையம் நவம்பர் 22-ந் தேதி வெளியிட்ட உத்தரவையும் வாபஸ் பெற்றுக்கொள்ள ஆணை பிறப்பிக்க வேண்டும். புதிய அணை கட்டுவதற்கான செயல்திட்ட வரைவு அறிக்கையை கர்நாடக அரசு தயாரிப்பதற்கும் தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான செயல்திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை எதிர்த்து, தமிழக அரசு நேற்று மத்திய அரசு மீதும், கர்நாடக அரசு மீதும் சுப்ரீம் கோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் பெயரில், மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் திட்ட மதிப்பீட்டு இயக்குனர் என்.முகர்ஜி, மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார், காவிரி நீர் வாரிய மேலாண்மை இயக்குனர் மல்லிகார்ஜூனா பி.குங்கே, கர்நாடக நீர்வளத்துறை முதன்மை இயக்குனர் ராகேஷ் சிங் ஆகியோருக்கு எதிராக இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர் பங்கீடு குறித்து கடந்த பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை முற்றிலும் மீறும் வகையில் கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பான திட்டத்தை முன்வைத்து உள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டில் டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

மேகதாது திட்டம் தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அளித்த ஒப்புதல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முற்றிலும் எதிராக அமைந்து இருக்கிறது. இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர்கள் 5 பேரும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அவமதிக்கும் வகையில் தமிழகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் கடமையாகும். காவிரி படுகையில் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பகுதிக்கு பாதிப்பு நேரும் வகையில் எந்தவிதமான நடவடிக்கையிலும் மேல்படுகையில் உள்ள கர்நாடகம் ஈடுபடக்கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தெளிவாக வரையறுத்து உள்ளது.

கர்நாடக மாநிலத்துக்கு தேவையான தண்ணீரை தேக்கி வைக்கும் அளவில் ஏற்கனவே ஏற்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் அவர்கள் புதிய நீர்த்தேக்கம் எதையும் கட்டுவதற்கான அவசியம் தற்போது இல்லை.

எனவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் வகையில் மேகதாது திட்டத்துக்கான வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ள மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் திட்ட மதிப்பீட்டு இயக்குனர், மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட 5 பேரையும் கோர்ட்டுக்கு அழைத்து, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த நவம்பர் 22-ந் தேதியன்று மத்திய நீர்வளத்துறை ஆணையம் மேகதாது திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு அளித்த ஒப்புதல் மற்றும் செயல்திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கும் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் இந்த மனு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் வக்கீல் ஜி.உமாபதி தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதிகள் சஞ்ஜய் கிஷண் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி, கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான செயல்திட்ட வரைவு அறிக்கையை தயாரிக்க கடந்த 22-ந் தேதி மத்திய அரசு அளித்துள்ள ஒப்புதலுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனு அடுத்த வாரம் உரிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் தெரிவித்தனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com