திரைப்படங்கள் ,வெப் சீரிஸ்கள் கசியும் விவகாரம்; டெலிகிராம் நிறுவனத்திற்கு செக்?

டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திரைப்படங்கள் ,வெப் சீரிஸ்கள் கசியும் விவகாரம்; டெலிகிராம் நிறுவனத்திற்கு செக்?
Published on

புதுடெல்லி,

சட்டவிரோதமாக திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்கள் பகிரப்படுவதைத் தடுக்க டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றிய விரிவான அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வாட்ஸ்அப்பைப் போல குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புகளைப் பகிரும் செயலியாக டெலிகிராம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த தளத்தில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் உள்ளிட்ட பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்கள் சட்டவிரோதமாக பகிரப்படுவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இதையடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டெலிகிராமுக்கு நோட்டீஸ் அனுப்பி, பதிப்புரிமை மீறலில் தொடர்ந்து ஈடுபடும் சேனல்கள் மற்றும் கணக்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் விதிமுறை அமலாக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

3,142 டெலிகிராம் சேனல்கள் அடையாளம்

திரைப்பட தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள், ஓடிடி (OTT) தளங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பதிப்புரிமை உரிமையாளர்களுக்கு ஆன்லைன் திருட்டால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஓடிடி நிறுவனங்கள் மற்றும் பதிப்புரிமை உரிமையாளர்களிடமிருந்து கிடைத்த புகார்களின் அடிப்படையில், சட்டவிரோதமாக திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் பிற பதிப்புரிமை உள்ளடக்கங்களை பகிர்ந்து வந்ததாகக் கூறப்படும் 3,142 டெலிகிராம் சேனல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் டெலிகிராம் நிறுவனம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com