சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தேவசம் போர்டின் நிபந்தனை நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், தேவசம் போர்டு விதித்திருக்கும் நிபந்தனை நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தேவசம் போர்டின் நிபந்தனை நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது
Published on

புதுடெல்லி,

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, அரசியல் சாசனத்தின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின்படி, சபரிமலை கோவிலுக்குள் செல்ல பெண்களுக்கு உரிமை உள்ளது என்றும், இது தொடர்பாக சட்டம் எதுவும் இல்லாத பட்சத்தில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

கேரள அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்ல அரசு ஆதரவாக இருப்பதாக கூறினார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டின் சார்பில் ஆஜரான வக்கீல் ஏ.எம்.சிங்வி வாதாடுகையில், மாதா விடாய் வயது காலத்தில் இருக்கும் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலான நடைமுறை சபரிமலை அய்யப்பன் கோவிலில் 800 ஆண்டுகளாக இருந்து வருவதாகவும், உலகிலேயே இந்த கோவிலில்தான் இந்த நடைமுறை உள்ளது என்றும் கூறினார்.

இந்த கோவிலுக்குள் அனைத்து சாதி மற்றும் மத மக்களும் சென்று வழிபட முடியும் என்றும், 41 நாள் விரதம் இருந்து கோவிலுக்கு செல்லும் வழக்கத்தில் குறிப்பிட்ட வயதிலான பெண்களுக்கு மாதவிடாய் நாட்களை தவிர்க்க முடியாது என்பதால் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்றால், இப்படி ஒரு நிபந்தனையை கடைபிடிப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்றும், சட்டப்படி இப்படி ஒரு நிபந்தனை விதிக்க முடியாது என்றும் கூறினார்கள்.

இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வக்கீல் ராஜூ ராமச்சந்திரன் வாதாடுகையில், குறிப்பிட்ட வயது பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பது, அரசியல் சாசனத்தில் தடை செய்யப்பட்டுள்ள தீண்டாமைக்கு ஒப்பானது என்று கூறினார்.

விவாதம் நேற்றுடன் முடிவடையாததால், வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com