கோவில் கடைகளை அகற்றும் பிரச்சினை: கடை உரிமையாளர்களின் கருத்துகளை கேட்ட பிறகு நடவடிக்கை தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்புது

கோவில்களில் உள்ள கடைகளை அகற்றும் பிரச்சினையில், கடை உரிமையாளர்களின் கருத்துகளை கேட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
கோவில் கடைகளை அகற்றும் பிரச்சினை: கடை உரிமையாளர்களின் கருத்துகளை கேட்ட பிறகு நடவடிக்கை தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்புது
Published on

டெல்லி,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அனைத்து கோவில் வளாகங்களில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது, மேலும் கடைகளை கடந்த ஜனவரி 31-ந்தேதிக்குள் அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மதுரையைச் சேர்ந்த குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குமார் மற்றும் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த ஜனவரி 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற பிறப் பிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்டோர் பதில் அளிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், அரசு வக்கீல் வினோத் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் நாகமுத்து ஆஜரானார்.

விசாரணை தொடங்கியதும் கோவில்களில் உள்ள கடைக் காரர்களின் தரப்பு கருத்துகளை கேட்கும் வாய்ப்பை அவர்களுக்கு ஏன் தமிழக அரசு வழங்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு தரப்பிலான வக்கீல்கள் வாதாடுகையில் கூறியதாவது:-

கடைக்காரர்களுக்கு அப்படி வாய்ப்பு வழங்க தேவையில்லை. ஏனென்றால் 50 ஆண்டுகளுக்கும் மேல் சிலர் கடை வைத்திருப்பதாக கூறினாலும் சட்டப்படி கோவில்களில் கடை வைக்க அனுமதிக் கப்படும் உரிமம் 5 ஆண்டுகளுக்கு மட்டுமேயானது. எனவே அவர்களுக்கான உரிமை தானாகவே செல்லாததாகி விடுகிறது. அவர்களுக்கு கடைகளை வைக்க 5 ஆண்டு காலத்துக்கு உரிமம் வழங்கப்பட்டது. அறநிலையத்துறை ஆணையர் அந்த உரிமங்களுக்கு நீட்டிப்பு வழங்கவில்லை

கடைகளை தொடருவதற்கு ஆணையரின் எழுத்துபூர்வமான உத்தரவு வேண்டும். யாருக்கும் அந்த உத்தரவு வழங்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவேண்டிய அவசியம் கிடையாது. இருந்தாலும் பல கோவில்களில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஆகவே நோட்டீஸ் வழங்கவில்லை என்று கூறுவதும் தவறானது.

இது பொதுமக்களுக்கான உரிமை மற்றும் தனி நபர்களுக்கான உரிமை ஆகியவற்றுக்கு இடையேயான பிரச்சினையாகும். எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி தமிழக அரசு அந்த கடைகளை காலி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவாகும். இதுதவிர பல ஆலயங்கள் 1000 ஆண்டுகளுக்கு மேல் தொன்மையானவை. அக்கோவில்களின் சிற்பங்கள் மற்றும் கலைப்பொருட்களை காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு தரப்பில் கூறுவதை இந்த கோர்ட்டு ஏற்றுக்கொள்ளும். அதே நேரத்தில் இந்து அறநிலையத்துறை சட்டம் 1959-ன் அடிப்படையில் கோவில்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்துவதற்கான நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளின் அடிப்படையில் தங்கள் கருத்துகளை தெரிவிக்க கடை உரிமையாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்து விட்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com