கர்நாடக சட்டசபை கூட்டுக்கூட்டம் தொடங்கியது

கர்நாடகத்தில் ஊழலை வேரோடு பிடுங்கி எறிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வீடற்ற அனைவருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்றும் கர்நாடக சட்டசபை கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் சூளுரைத்தார்.
கர்நாடக சட்டசபை கூட்டுக்கூட்டம் தொடங்கியது
Published on

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

கவர்னர் உரை

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. இது பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகும். இது காங்கிரஸ் ஆட்சியின் முதல் கூட்டம் என்பதால், சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார்.

இதில் சட்டசபை உறுப்பினர்களுடன் மேல்-சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த உரையின்போது, தாவர்சந்த் கெலாட் கூறியதாவது:-

கர்நாடகம் பல்வேறு தனித்துவங்களை கொண்டது. கடந்த காலங்களில் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நிர்வாகம் நடத்தப்பட்டது, புதுமைகளை புகுத்து

வதில் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் மக்கள் சார்ந்த பொருளாதாரத்தை முன்னெடுக்க எனது அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தை வலிமையான பொருளாதார பலமிக்க மாநிலமாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம்.

அரசியல் சாசனம்

அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளப்படி சமுதாயத்தில் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணியை செய்வோம். அடுத்த 5 ஆண்டுகளில் புத்தர், பசவண்ணர், அம்பேத்கர், குவெம்பு, நாராயணகுரு ஆகியோர் கண்ட கனவுப்படி சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நாங்கள் பாடுபடுவோம். குறுகிய மனம் படைத்தவர்கள் ஆண்-பெண் இடையே, சாதி-மதங்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்.

இத்தகைய விஷயங்களுக்கு எதிராக தான் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. அந்த அரசியல் சாசனம் வழியில் பயணித்து, அனைத்து தரப்பு மக்களும் வளர்ச்சி

யடையவும், அமைதியை நிலைநாட்டவும் எனது அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த அரசு அமைதியான, அன்பு மிகுந்த சமுதாயத்தை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

பணம் கொடுக்கிறேம்

தற்போது கர்நாடகம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த சிக்கலில் இருந்து கர்நாடகத்தை வெளியே கொண்டு வருவதே எனது அரசின் முதன்மையான நோக்கம் ஆகும். மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் மக்களின் நலன் ஆகிய இரண்டு விஷயங்களை உறுதி செய்து நல்லாட்சியை நடத்துவோம். நாங்கள் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதாக உறுதி அளித்துள்ளோம். அந்த திட்டங்களை செயல்படுத்தும் பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.

அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் 5 கிலோ அரிசியுடன் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க முடிவு செய்துள்ளோம். தற்போது போதிய அரிசி கிடைக்காததால் 5 கிலோ அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்கிறோம். போதிய அரிசி கிடைத்ததும், நாங்கள் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்குவோம். மக்களின் பசியை போக்க தவறும் அரசு, மக்கள் விரோத அரசு ஆகும். முன்பு இந்திரா உணவகம் திறக்கப்பட்டது.

சலுகை கிடைக்கும்

பல்வேறு வகையான கூலித்தொழிலாளர்கள் அந்த உணவகத்தில் குறைந்த விலையில் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வந்தனர். அதனால் அந்த உணவகங்களை

மேலும் சிறப்பான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிகளில் பட்டம் பெற்று வெளியே வரும் மாணவர்கள் 6 மாதங்கள் வரை வேலை இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரமும், பாலிடெக்னிக் முடித்தோருக்கு ரூ.1,500-ம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும்.

2.14 கோடி வீட்டு மின் இணைப்புகளுக்கு மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டு இணைப்பு உள்ளவர்களில் 98 சதவீதம் பேருக்கு இந்த சலுகை கிடைக்கும். கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்குகிறோம்.

ஊழலை ஒழிப்பது சவால்

பல்வேறு காரணங்களால் ஊழல் நமது நிர்வாக முறையில் வேரூன்றி போய் உள்ளது. இந்த ஊழல் நிறுவன ரீதியில் வளர்ந்துவிட்டது. ஊழலை ஒழிப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த சவாலை எதிர்கொள்ளவும், ஊழலை வேரோடு பிடுங்கி எறியவும் உங்களின் ஒத்துழைப்பு தேவை. இது தொடர்பாக அரசு நிர்வாகம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும். வளங்களில் அனைத்து சாதி, மத, பிரிவினரின் பங்கு உறுதி செய்யப்படும்.

ஒரு குறிப்பிட்ட தரப்பு

மக்கள் நல்ல கல்வி பயின்று முன்னேற்றம் அடைகிறார்கள். அதே நேரத்தில் சில தீய எண்ணம் கொண்டவர்கள் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கலாசாரம் கொண்ட மக்கள் கர்நாடகத்தில் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

நல்லிணக்க சூழல்

இந்த முறை கர்நாடக மக்கள் அன்பு, ஒற்றுமைக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற எனது அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த நோக்கத்தில் அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும். சொந்தமாக கற்கும் திறன், இதயம், மூளை மூலம் அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்கப்படும். அதற்கான கல்வி முறை உருவாக்கப்படும்.

கல்லூரிகளில் நல்லிணக்க சூழல் உருவாக்கப்பட்டு ஒரு சிறப்பான உயர்கல்வி முறையை ஏற்படுத்துவோம். சுகாதாரத்துறையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் வீடற்ற அனைவருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். வளர்ச்சியில் மண்டல ஏற்றத்தாழ்வுகள் போக்க ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.

தரிசு நிலங்கள்

குறிப்பாக கல்யாண கர்நாடக பகுதியில் உள்ள மாவட்டங்களில் சுகாதாரம், கல்வி, அத்தியாவசிய சேவைகள் மேம்படுத்தப்படும். கிருஷி பாக்ய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். ராஜஸ்தானுக்கு அடுத்தப்படியாக கர்நாடகத்தில் தான் தரிசு நிலங்கள் அதிகமாக உள்ளன. அந்த நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்த நீர்ப்பாசன திட்டங்கள் அமல்படுத்தப்படும். அதே போல் பசு பாக்ய திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு உரம், விதைகள் உரிய நேரத்தில் வழங்கப்படும்.

இவ்வாறு தாவர்சந்த் கெலாட் பேசினார்.

இன்று விவாதம்

இதைத்தொடர்ந்து மரணம் அடைந்த முன்னாள் உறுப்பினர்கள் உள்பட முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டசபை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. இன்று கவர்னர் உரை மீதான விவாதம் நடக்க உள்ளது.

ஆனால் எதிர்க்கட்சியான பா.ஜனதா, அரசின் 5 உத்தரவாத திட்டங்களை உடனே அமல்படுத்த கோரி பிரச்சினையை எழுப்ப திட்டமிட்டுள்ளது. இதனால் இன்று சட்டசபையில் காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com