கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதா பொருட்களை ஏலம் விட வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு சமூக ஆர்வலர் கடிதம்

கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு சமூக ஆர்வலர் கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதா பொருட்களை ஏலம் விட வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு சமூக ஆர்வலர் கடிதம்
Published on

பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் தண்டனை காலம் நிறைவு பெற்றதால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்ததால் இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அதே நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து ஏராளமான பட்டுப்புடவைகள், செருப்புகள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.

கடிதம்

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டதும், ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டு உள்ளன. பல ஆண்டுகளாக அந்த பொருட்கள் அனைத்தும் கருவூலத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் தாடர்பாக பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வருமான நரசிம்மமூர்த்தி என்பவர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் பெங்களூரு சிறப்பு கோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஏலம் விட வேண்டும்

அந்த கடிதத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் கர்நாடக அரசின் கருவூலத்தில் உள்ளது. சுமார் 26 ஆண்டுகளாக கருவூலத்தில் இருப்பதால் அவை சேதமடைய வாய்ப்புள்ளது.

எனவே அந்த பொருட்களை ஏலத்தில் விட வேண்டும். ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை, அவரது நலம் விரும்பிகள் வாங்கி பொக்கிஷமாக வைத்துக்கொள்வார்கள். இவ்வாறு ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை பொதுமக்களின் வளர்ச்சிக்காக செலவு செய்யலாம் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com