“தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை தடை செய்ய வேண்டும்” - அசாம் எம்.பி. பத்ருதின் அஜ்மல் கோரிக்கை

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை தடை செய்ய வேண்டும் என பத்ருதின் அஜ்மல் எம்.பி. கூறியுள்ளார்.
“தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை தடை செய்ய வேண்டும்” - அசாம் எம்.பி. பத்ருதின் அஜ்மல் கோரிக்கை
Published on

திஸ்பூர்,

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜேஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டேர் நடிப்பில் உருவான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம், கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தற்போது இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. 80-களின் பிற்பகுதியிலும் 90-களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதைக் களமாக கொண்டு படம் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார். பல்வேறு மாநிலங்களில் இந்த படத்திற்கு பல்வேறு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த படம் குறித்த சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த படம் குறித்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.யும், அகில இந்திய ஜனநாயக முன்னனி கட்சியின் தலைவருமான பத்ருதீன் அஜ்மல் கூறுகையில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை தான் பார்க்கவில்லை என்றும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால் இந்த படத்தை அசாம் மாநில அரசு மற்றும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் படத்தில் வரும் சம்பவங்கள் நடந்து முடிந்தவை என்று குறிப்பிட்ட அவர், அத்தகைய சூழல் நாட்டில் தற்போது இல்லை என்று தெரிவித்தார். அசாமில் நடந்த நெல்லி சம்பவம் உள்பட, காஷ்மீருக்கு வெளியே நடந்த பல சம்பவங்கள் குறித்து எந்த திரைப்படமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதே வேளையில், அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா, தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் திரைப்படத்தை பார்க்க விரும்பும் அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com