

திருவனந்தபுரம்,
கேரள சட்டசபை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. 15-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக கேரள சட்டசபை சபாநாயகர் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
14-வது கேரள சட்டசபையின் 22-வது கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை ) கவர்னர் ஆரிப் முகம்மது கான் உரையுடன் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. கொரோனா கட்டுப்பாட்டு உத்தரவுகளை பின்பற்றி கூட்டம் நடைபெறும். கவர்னரின் உரைக்கு பின், இன்றைய கூட்டத்தில் , மரணம் அடைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சங்கனாச்சேரி சி.எப். தாமஸ் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
தொடர்ந்து 11 -ந் தேதி வரை சபை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். பின்னர் 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். 15-ந் தேதி கேரள நிதி மந்திரி தாமஸ் ஐசக், 2021 - 2022-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை (பட்ஜெட்) தாக்கல் செய்வார். பட்ஜெட் மீதான பொது விவாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
சபாநாயகரை பதவியில் இருந்து நீக்க கோரும் தீர்மான அறிவிப்பின் பேரில் அரசியலமைப்பின் விதிகள் மற்றும் சட்டமன்றத்தின் விதிகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரவு செலவு திட்டத்தின் இறுதி துணை கோரிக்கை மீதான ஓட்டெடுப்பு 21-ந் தேதி நடைபெறும். இந்த கூட்டம் வருகிற 28-ந் தேதி நிறைவு பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.