‘கிச்சடி’ அரசாங்கம் அமைய வாக்களிக்க வேண்டாம் பிரதமர் மோடி வேண்டுகோள்

கிச்சடி அரசாங்கம் குறித்து மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்களிப்பது ஆபத்து நிறைந்தது.
‘கிச்சடி’ அரசாங்கம் அமைய வாக்களிக்க வேண்டாம் பிரதமர் மோடி வேண்டுகோள்
Published on

அசம்கார்,

உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது:-

வாக்காளர்கள் கிச்சடி (எதிர்க்கட்சிகள் இணைந்த) அரசாங்கம் அமைய வாக்களிக்க வேண்டாம். கிச்சடி அரசாங்கம் குறித்து மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்களிப்பது ஆபத்து நிறைந்தது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வாக்களிப்பது அராஜகம், நிலையற்றதன்மை ஆகியவற்றுக்கு முன்னெடுத்துச் செல்வதுடன், நாடு பாதுகாப்பற்றதாக மாறிவிடும். முந்தைய கூட்டணி அரசுகள் 2ஜி உள்பட பல்வேறு ஊழல்களில் எப்படி மூழ்கின என்பதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறீர்கள்.

உங்கள் வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒருங்கிணைந்து மத்தியில் ஒரு வலிமையான அரசாங்கம் அமைய வாக்களிக்க வேண்டும்.

முன்பு அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் அசம்காருடன் தொடர்பு இருந்தது. 2014-ம் ஆண்டுக்கு பின்னர் என்ன நடந்தது என்பதை நீங்கள் அனைவரும் பார்க்கிறீர்கள். 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் தொடர்ந்து பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இது நிறுத்தப்பட்டது. இந்த தாக்குதல்களுக்கு யார் பொறுப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்போது காஷ்மீர் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் எப்படி கட்டுப்படுத்தப்பட்டது. நமது அரசு தேசநலனுக்கு முன்னுரிமை கொடுத்தது தான் காரணம். நாம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை தாக்கியுள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com