தாவணகெரேயில் கனமழை: ஏரி உடைந்து பண்ணைக்குள் வெள்ளம் புகுந்தது; ஆயிரம் கோழிகள் செத்தன

தாவணகெரேயில் பெய்த கனமழைக்கு ஏரி உடைந்து பண்ணைக்குள் வெள்ளம் புகுந்ததில் ஆயிரம் கோழிகள் செத்தன.
தாவணகெரேயில் கனமழை: ஏரி உடைந்து பண்ணைக்குள் வெள்ளம் புகுந்தது; ஆயிரம் கோழிகள் செத்தன
Published on

பெங்களூரு:

கார்கள் மூழ்கின

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது வடமேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகர்நாடகத்தில் வடமேற்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ளது. உப்பள்ளி-தார்வார், கொப்பல், பெலகாவி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. உப்பள்ளி-தார்வாரில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகள் குளமாக மாறி உள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளது.

உப்பள்ளியில் உள்ள வணிக வளாகத்தின் வாகன நிறுத்தும் இடத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கி பழுதாகின. மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றி பின்னர் கார்கள் பழுது நீக்க எடுத்து செல்லப்பட்டன. கொப்பல் மாவட்டம் குகனூரில் பெய்த மழைக்கு சாலையில் பள்ளம் விழுந்து உள்ளது. பச்சனாலா என்ற கிராமத்தில் தரைப்பாலம் மூழ்கியுள்ளது.

ஆயிரம் கோழிகள் செத்தன

பெலகாவி மாவட்டம் சிக்கோடியில் சாலைகள் குளங்களாக மாறி உள்ளது. இந்த நிலையில் தாவணகெரேயில் பெய்த கனமழை காரணமாக ஒரு ஏரி உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மகேஷ் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் செத்தன. செத்து போன கோழிகள் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

அரசுக்கு தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மகேஷ் கோரிக்கை விடுத்து உள்ளார். துமகூரு மாவட்டம் பாவகடாவில் பெய்த மழைக்கு துனிகுண்டே என்ற கிராமத்தில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. தலைநகர் பெங்களூருவிலும் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்தது. இதனால் மேம்பால சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அங்கு வாகனங்கள் தத்தளித்தப்படி சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த மழையால் மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com