திருமணமான ஆண்-பெண் இடையேயான கள்ள உறவு பற்றிய சட்டப்பிரிவு சம உரிமைக்கு விரோதமானது: சுப்ரீம் கோர்ட்டு கருத்து

திருமணமான ஆண்- பெண் இடையேயான கள்ள உறவு பற்றிய இந்திய தண்டனை சட்டத்தின் 497-வது பிரிவு சமஉரிமைக்கு எதிரானது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
திருமணமான ஆண்-பெண் இடையேயான கள்ள உறவு பற்றிய சட்டப்பிரிவு சம உரிமைக்கு விரோதமானது: சுப்ரீம் கோர்ட்டு கருத்து
Published on

புதுடெல்லி,

திருமணமான ஆண்-பெண் இடையேயான கள்ள உறவு பற்றிய இந்திய தண்டனை சட்டத்தின் 497-வது பிரிவுக்கு எதிராக இத்தாலியில் வசிக்கும் இந்தியரான ஜோசப் ஷைன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்திய தண்டனை சட்டத்தின் 497-வது பிரிவு, திருமணமான ஆணோ அல்லது பெண்ணோ தங்கள் வாழ்க்கை துணை அல்லாத வேறொருவருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால், அதில் சம்பந்தப்பட்ட ஆணை மட்டுமே தண்டிக்க வகை செய்கிறது என்றும், இது ஆண்-பெண் இடையேயான சமத்துவ உரிமைக்கு எதிரானது என்பதால், இந்த சட்டப்பிரிவு செல்லாது என அறிவிக்கவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஜனவரி 5-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, திருமணமான ஆண்-பெண் இடையேயான கள்ள உறவில் ஆணை மட்டுமே குற்றவாளியாக கருதி தண்டனை வழங்குவது, அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவு வழங்கியுள்ள சமஉரிமையை மீறுவதாக உள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் காளஸ்வரம் ராஜ் வாதாடுகையில், இந்திய தண்டனை சட்டத்தின் 497-வது பிரிவின் பல்வேறு அம்சங்கள் பற்றி குறிப்பிட்டார். திருமணமாகாத ஆணும் பெண்ணும் விரும்பி பாலியல் உறவு வைத்துக்கொண்டால் அதற்கு இந்த சட்டப்பிரிவு பொருந்தாது என்றும், ஆனால் திருமணமான ஆணோ, பெண்ணோ வாழ்க்கை துணை அல்லாத வேறொருவருடன் கள்ள உறவு வைத்துக் கொண்டால் அதை தண்டனைக்குரிய குற்றமாக கருத இந்த சட்டப்பிரிவு வகை செய்கிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்த கள்ள உறவு விவகாரத்தில் திருமணமான அந்த ஆணை மட்டுமே தண்டிக்க இந்த சட்டப்பிரிவு வகை செய்கிறது என்றும் பெண்ணை குற்றவாளியாக கருதி தண்டிக்க வகை செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், திருமணமான ஆண்-பெண் இடையேயான கள்ள உறவு விவகாரம் தொடர்பான இந்திய தண்டனை சட்டத்தின் 497-வது பிரிவு, அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சமஉரிமைக்கு விரோதமாகவும், அதை மீறுவதாகவும் அமைந்துள்ளது என்றனர்.

மேலும் இந்த சட்டப்பிரிவு, திருமணமான பெண் திருமணமான மற்றொரு ஆணுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் போது, அந்த கள்ள உறவு கணவரின் சம்மதத்துடனோ அல்லது அவர் கண்டும் காணாமல் இருப்பது போல நடந்து கொள்வதாக கருதும் வகையிலும் அமைந்துள்ளது என்றும் தெரிவித்தனர். அத்துடன் இந்த சட்டப்பிரிவு பெண்ணை ஒரு பொருளை போன்று நடத்துவதாக உள்ளது என்றும் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com