

புதுடெல்லி,
மத்திய அரசுக்கு எதிராக காமன் காஸ் என்ற தொண்டு நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தாக்கல் செய்த பிரமாண மனுவில், லோக்பால் உறுப்பினர்களை சிபாரிசு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைப்பதற்காக, பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் கடந்த 19ந் தேதி நடைபெற்றது. ஆனால், தேடுதல் குழு இறுதி செய்யப்படவில்லை. இதற்காக விரைவில் அடுத்த கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதைப்படித்த நீதிபதிகள், மத்திய அரசின் மனு குறித்து அதிருப்தி தெரிவித்தனர். 4 வாரங்களுக்குள் சிறப்பான பிரமாண மனுவை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.