மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
Published on

பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆண்டுதோறும் மகாமேளா நடத்தப்படுகிறது. இந்த மகாமேளா காலத்தில் அங்கு புனித நதியான கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் பெருந்திரளானோர் புனித நீராடுவது வழக்கமாக உள்ளது. தற்போது அங்கு மகாமேளா தொடங்கி நடந்து வருகிறது. மகாமேளாவின்போது பிரயாக்ராஜில் புனித நீராடுவதால் மக்களின் பாவங்கள் நீங்குவதாக நம்பப்படுகிறது.

அந்த வகையில், பவுர்ணமி தினமான இன்று பிரயாக்ராஜில் திருவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மகா மேளா நடைபெறும் இடத்தில் 10,000 சதுர அடி பரப்பளவில் பத்து நீராடும் படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் ஒன்பது மிதவைப் பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. அதிகாரிகளின் கூற்றுப்படி, காலை 10 மணி வரை சுமார் 9 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 

இதற்கிடையே, மகாமேளா தொடர்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"கங்கை அன்னைக்கு வணக்கம்! புனித யாத்திரைத் தலங்களின் அரசனான பிரயாக்ராஜுக்கு, புனித சங்கமத்தில் நீராடுவதற்காக வருகை தந்துள்ள அனைத்து மரியாதைக்குரிய துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் அனைவருக்கும் அன்பான வரவேற்பும் வாழ்த்துக்களும். கங்கை அன்னை, யமுனை அன்னை மற்றும் சரஸ்வதி அன்னை அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றட்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை." என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com