மராட்டிய சட்டசபை நாளை கூடுகிறது; புயலை கிளப்ப எதிர்க்கட்சி திட்டம்

மந்திரிகள் மீதான ஊழல் புகார் பரபரப்புக்கு மத்தியில் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் மராட்டிய சட்டசபை கூட்டம் நாளை தொடங்குகிறது. இதில் எதிர்க்கட்சியான பா.ஜனதா புயலை கிளப்ப திட்டமிட்டு உள்ளது.
மராட்டிய சட்டசபை நாளை கூடுகிறது; புயலை கிளப்ப எதிர்க்கட்சி திட்டம்
Published on

ஊழல் புகார்கள்

மாதம் ரூ.100 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு சம்மன் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்தநிலையில் நாளை (திங்கட்கிழமை) ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. அனில்தேஷ்முக் ஊழல் பிரச்சினை அடங்குவதற்குள், மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு தொடர்புடைய ரூ.65 கோடி சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. மேலும் சிவசேனாவை சேர்ந்த போக்குவரத்து துறை மந்திரி அனில் பரப் மீது வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே கோர்ட்டில் நீதிபதியிடம் ஊழல் புகாரை தெரிவித்தார்.

நாளை கூடுகிறது

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. மறுநாள் 6-ந் தேதியுடன் சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது.முன்னதாக கூட்டத்தொடரை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தியது. இதுதொடர்பாக சமீபத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம்

எழுதினார். ஆனால் டெல்டா பிளஸ் உருமாறிய வைரசால் 3-வது கொரோனா அலைக்கு வாய்ப்பு இருப்பதால் சட்டசபை கூட்டத்தொடரை 2 நாட்களுக்கு மேல் நடத்த முடியாது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கவர்னருக்கு பதில் அளித்தார். இந்தநிலையில் எதிர்க்கட்சிகளில் கேள்விக்கு பயந்து தான் அரசு கூட்டத்தொடரை 2 நாட்கள் மட்டுமே நடத்துவதாக பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.

அனல் பறக்கும்

இதற்கிடையே நாளை தொடங்க உள்ள சட்டசபை கூட்டத்தொடரில், அனில்தேஷ்முக் ஊழல் புகார், அஜித்பவார் சர்க்கரை ஆலை விவகாரத்தில் எதிர்க்கட்சியான பா.ஜனதா அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல சச்சின்வாசே மந்திரி அனில்பரப், துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு எதிராக தெரிவித்து உள்ள ஊழல் குற்றச்சாட்டையும் பா.ஜனதா சட்டசபையில் எழுப்பி புயலை கிளப்ப திட்டமிட்டு உள்ளன. இது தவிர மராத்தா இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுகீட்டை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருக்கும் விவகாரம், சபாநாயகர் தேர்தல் தொடர்பாகவும் சட்டசபையில் பா.ஜனதா கேள்வி கணைகளை எழுப்ப உள்ளது.

இதேபோல பா.ஜனதாவுடன் சிவேசனா மீண்டும் கூட்டணி வைக்கும் என்று பேசப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டசபை கூட்டத்தில் ஆளும் கூட்டணி கட்சிகள் தங்களது ஒற்றுமையை காட்டும் என்று தெரிகிறது.

தீர்மானம்

இதற்கிடையே சட்டசபை கூட்டம் 2 நாட்கள் மட்டுமே நடைபெறுவதால், கேள்வி நேரம் எதுவும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மசோதாக்கள் தாக்கல், மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், விவாதத்துக்கு அதிக வாய்ப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.

மேலும் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று மந்திரி நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com