

புதுடெல்லி,
நாட்டில் கொரோனா முதல் அலை மற்றும் 2வது அலையில் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து காணப்பட்டன. முதல் அலையை விட 2வது அலையில் அதிக பாதிப்புகளை நாடு சந்தித்தது.
இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் தொடக்கம் வரையில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 32 லட்சம் முதல் 37 லட்சம் வரை இருக்க கூடும் என சில ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனை ஊடகங்களும் அறிக்கைகளாக வெளியிட்டன.
இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் 2021ம் ஆண்டு நவம்பர் வரையில் 4.6 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனால், சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களில், 32 லட்சம் முதல் 37 லட்சம் வரை உயிரிழப்புகள் இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா உயிரிழப்புகளை கிராம பஞ்சாயத்து, மாவட்ட மற்றும் மாநிலம் என வெவ்வேறு பிரிவுகளில் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. வெளிப்படை தன்மையுடனேயே உயிரிழப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. மாநிலங்கள் தனிப்பட்ட முறையில் அறிவிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கையை தொகுத்து மத்திய அரசு வெளியிடுகிறது என தெரிவித்து உள்ளது.
அதனால், கொரோனா உயிரிழப்பு அதிகம் என்ற சில ஊடக செய்திகள் தவறானவை மற்றும் துல்லியமற்றவை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.