

பெங்களூரு,
மேகதாது திட்டம் குறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் தமிழ்நாட்டுக்கு எதிரானது அல்ல. எங்கள் நிலப்பகுதியில் அணை கட்டுகிறோம். சுப்ரீம் கோர்ட்டு பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு 4.75 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் ஒதுக்கீடு செய்துள்ளது.
இங்கு கட்டப்படும் அணையில் கிடைக்கும் நீரை பாசனத்துக்கு பயன்படுத்த மாட்டோம். ஒரு வாளி நீரை கூட குடிநீர் தவிர்த்து வேறு நோக்கத்துக்கு பயன் படுத்த மாட்டோம். இது 100 சதவீதம் தெளிவானது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏன் எதிர்க்கிறது என்று எனக்கு தெரியவில்லை. தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
இதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இங்கு அணை கட்டினால் அது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் உதவும். முதல்-அமைச்சர் விஜய் வரட்டும் அவருடன் அமர்ந்து நாங்கள் பேச தயாராக உள்ளோம். அவர்களின் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் வரட்டும். நாங்கள் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம். இவ்வாறு அவர் கூறினார்.