சிவப்பு நிறமாக மாறவிருக்கும் நிலா.! அரிய நிகழ்வை இந்தியாவில் எப்போது பார்க்கலாம்.?

சூரிய கிரகணங்களைப் போலன்றி, சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.
சிவப்பு நிறமாக மாறவிருக்கும் நிலா.! அரிய நிகழ்வை இந்தியாவில் எப்போது பார்க்கலாம்.?
Published on

புதுடெல்லி,

சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுகிறது. பூமி, சூரிய ஒளியை சந்திரன் மேல் விழாமல் தடுப்பதால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதை ரத்த நிலவு என்று சொல்வார்கள். இந்தநிலையில், வருகிற செப்டம்பர் 7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதை இந்தியாவில் உள்ளவர்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்.

செப்டம்பர் 7-ந்தேதி இரவு 8.58 மணிக்கு தொடங்கும் கிரகணம் 8-ந் தேதி அதிகாலை 2.25 மணி வரை தெரியும். இது சமீபத்திய ஆண்டுகளில் மிக நீண்ட கிரகணங்களில் ஒன்றாகும். இதை எந்த வித கருவிகளும் இன்றி வெறும் கண்களாலேயே பார்க்கலாம். குறிப்பாக சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு நோக்கி வானத்தை பார்த்தாலே போதும் முழு சந்திர கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம். பூமியின் லேசான நிழலுக்குள் சந்திரன் நுழையும் கட்டத்தை பெனும்பிரல் என்று அழைக்கிறார்கள். அதில் தொடங்கி கிரகணம் மேலும் வளர்கிறது. இதை காண்பதற்கு மட்டும் தொலைநோக்கி தேவைப்படலாம்.

முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறமாக மாறுவதற்கு ரேலீ சிதறல் காரணமாகும், சூரியன் உதிக்கும்போதும் அஸ்தமனத்தின் போதும் சிவப்பு நிறத்தில் தோன்றும். அதன் விளைவு காரணமாகவே இந்த சிவப்பு நிலவு என்று சொல்லப்படும் இரத்த நிலவு ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இரவு 11.41 மணிக்கு முழுமையான சந்திர கிரகணம் நிகழும். ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அலாஸ்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி மற்றும் உலகின் பெருங்கடல்கள் மற்றும் துருவப் பகுதிகள் முழுவதும் இந்த நிகழ்வு தெரியும். உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 87 சதவீதம் பேர் இதன் ஒரு பகுதியையாவது பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சூரிய கிரகணங்களைப் போலன்றி, சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.

அடுத்த முழு சந்திர கிரகணம் 2026-ம் ஆண்டு மார்ச் 3 அன்று நிகழ உள்ளது. ஆனால் அதை சரியாக பார்க்க முடியாது. அதன் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவில் தெரியும். ஏனென்றால் சந்திர கிரகணம் நிகழ்ந்து முடியும் நேரத்தில்தான் இங்கு நமக்கு சந்திரன் வானில் தென்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com