திரிணாமுல் காங்கிரஸ் வெற்றியை தனியாளாக புரட்டி போட்ட மருத்துவ மாணவியின் தாயார்

ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவராக மட்டுமில்லாமல், 4-வது முறையாக மம்தா பானர்ஜி வெற்றி பெறும் வாய்ப்பை தடம் புரள செய்து விட்டார்.
திரிணாமுல் காங்கிரஸ் வெற்றியை தனியாளாக புரட்டி போட்ட மருத்துவ மாணவியின் தாயார்
Published on

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரியில், 31 வயது முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவி ஒருவர், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டில் இரவு பணியில் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர வகையில் கொலை செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி மருத்துவர்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கு விசாரணையில் மேற்கு வங்காள போலீசாரின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த கொல்கத்தா ஐகோர்ட்டு, பின்னர் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது. இதன்பின்பு, வழக்கில் பல தனிநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடைய உள்ள சூழலில், இதனை முன்னிட்டு, மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டது. வரலாறு காணாத வகையில் 90 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பதிவாகின.

இதில், மருத்துவ மாணவியின் தாயார் ரத்னா தேப்நாத், பா.ஜ.க. சார்பில் பனிஹாடி தொகுதியில் போட்டியிட்டார். இதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில், ரத்னா தேப்நாத் 87 ஆயிரத்து 977 வாக்குகள் பெற்றுள்ளார். கோஷ் குடும்பத்தின் தொகுதியான இதனை மாற்றி காட்டியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரசின் கோஷ், 28,836 வாக்குகள் பின்தங்கி தோல்வி அடைந்துள்ளார். இதேபோன்று, மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது. அக்கட்சி 200-க்கும் கூடுதலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

2011-ம் ஆண்டு முதல் இந்த தொகுதி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றி தொகுதியாக இருந்து வந்தது. 15 ஆண்டுகளாக இருந்த சாதனையை தனியாளாக ரத்னா உடைத்துள்ளார். அவர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவராக மட்டுமில்லாமல், 4-வது முறையாக மம்தா பானர்ஜி வெற்றி பெறும் வாய்ப்பை தடம் புரள செய்து விட்டார். பாதிக்கப்பட்ட தாயாக இருந்து, அரசியலை புரட்டு போடும் அளவுக்கு அவருடைய பிரசாரம், தேர்தல் பயணம் அமைந்து விட்டது. இதனால், தீதி மற்றும் மோடி என இருந்த போட்டிக்கு பதிலாக, குடிமகன் மற்றும் அரசியல் சிஸ்டம் என மாறியது.

ஒவ்வொரு முறை அரசியல் கூட்டத்தில் ரத்னா கலந்து கொண்டபோது, அது கொள்கை அடிப்படையில் என்றில்லாமல் ஆர்.ஜி. கர் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான நினைவூட்டலாகவே இருந்தது. அவர் பிரசாரத்தில் பேசும்போது, அவருடைய மகளுக்கு நடந்தது யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்க கூடும் என கூறினார். இதனால், மகளிர் பாதுகாப்பு விவகாரம், மாநில அளவில் பிரதிபலிக்கும் பிரசார யுக்தியாக மாறி பா.ஜ.க.வுக்கு அது பயன்பட்டது.

2-வது கட்ட தேர்தலில் 91.62 சதவீத வாக்குகள் பதிவாகி, முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ரத்னா பேசும்போது, திரிணாமுல் காங்கிரசை அடியோடு தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என்றார்.

பெண்கள் பாதுகாப்பில் அரசின் நிலைப்பாட்டை குறிப்பிட்டு தாக்கினார். இதுபோன்ற வன்கொடுமை சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் நம்முடைய ஒரே வருத்தம் என்னவென்றால், நம்முடைய பெண் முதல்-மந்திரியே பெண்களை அவமதிக்கிறார் என்பதே ஆகும் என ரத்னா கூறினார்.

பெண்கள் இரவு நேர பணியை தவிர்க்க வேண்டும் அல்லது நள்ளிரவில் வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என மம்தா பானர்ஜி கூறிய விசயங்களை குறிப்பிட்ட ரத்னா, இந்த முறை, இதற்கு எதிராக வங்காளம் போராடும் என்று கூறினார். தேர்தல் நாளில் கூட மோட்டார் பைக்குகளில் வந்த சில குண்டர்கள், அவரை சூழ்ந்து, தகாத வார்த்தைகளால் பேசினர்.

அச்சுறுத்தலும் விடுத்தனர். ஆனால், ரத்னா வாக்கு மையத்தில் இருந்து அகன்று செல்லவில்லை. அமைதியான முறையில் மக்கள் வாக்களித்து, நீதிக்கு ஆதரவாக தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த அது வழிவகுத்து விட்டது. இதனால், தெருவில் இறங்கி போராடுபவராக மம்தா பானர்ஜி தன்னை காட்டி கொண்டபோதும், லட்சுமி பந்தர் போன்ற நல திட்டங்களை அறிவித்தபோதும், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரை போட்டியிட செய்யும் முடிவை பா.ஜ.க. எடுத்து வெற்றியை கட்டமைத்து விட்டது.

முதல்முறை வேட்பாளராக போட்டியிட்டு, பனிஹாட் தொகுதியில் 15 ஆண்டுகளாக வெற்றியை கைப்பற்றி வந்த ஆளும் கட்சியை சாய்ப்பது என்பது அதற்கு எதிரான அலையையே, மக்களின் மனநிலையையே எடுத்து காட்டுவதுடன், அது பா.ஜ.க.வை பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றும் அளவுக்கு புரட்டி போட்டு விட்டது. பா.ஜ.க. 204 தொகுதிகளில் வெற்றி பெற அது வழிவகுத்து விட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com