

புதுடெல்லி,
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதிக பாதிப்புகளை கொண்ட மராட்டியத்தின் புனே, அவுரங்காபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும், குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவிலும் பல நகரங்களில் இரவு ஊரடங்குக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இந்த சூழலில் டெல்லியில் இதேபோன்று ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட கூடும் என்ற அச்சத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல படையெடுக்கின்றனர் என சில ஊடகங்களில் செய்தி வெளிவந்தன. இதற்காக ரெயில் நிலையங்களில் மக்கள் குவிந்திருப்பது போன்ற புகைப்படங்களும் வெளிவந்தன.
ஆனால், இதில் உண்மையில்லை என வடக்கு ரெயில்வே நிர்வாகம் இன்று தெரிவித்து உள்ளது. இதுபற்றி தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தீபக் குமார் இன்று கூறும்பொழுது, கொரோனாவால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர் என்ற ஊடக செய்தி சரியானது அல்ல.
பொதுமக்கள் அதிக அளவில் கூடுகின்றனரா? என அறிய இதற்காக புதுடெல்லி ரெயில் நிலையத்தில் நாங்கள் சென்று சோதனையிட்டோம். எங்களுடைய அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் சென்று உண்மையை காட்ட வேண்டும் என்று ஊடகங்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, பழைய மற்றும் போலியான வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம் என்று ஒவ்வொருவரிடமும் மத்திய ரெயில்வே கேட்டு கொண்டுள்ளது. கொரோனாவுக்கான முறையான அணுகுமுறைகளை பின்பற்றும்படியும் கேட்டு கொண்டுள்ளது.