

புதுடெல்லி,
கொரோனாவை கட்டுப்படுத்தும் முக்கிய அம்சங்களில் ஒன்று, பரிசோதனையை தீவிரப்படுத்துவது ஆகும். அதிகமான பரிசோதனைகள் மூலம் தொற்று பாதித்தவரை விரைவில் கண்டுபிடித்து தனிமைப்படுத்தினால், இந்த தொற்று பரவலை தடுக்க முடியும்.
எனவே கொரோனா பரிசோதனையை அதிகரிப்பதில் அனைத்து நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் இந்தியாவும் இந்த பரிசோதனைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஜனவரி தொடக்கத்தில் புனேயில் உள்ள தேசிய வைரஸ் பரிசோதனை ஆய்வுக்கூடம் மட்டுமே கொரோனா பரிசோதனை மையமாக இயங்கி வந்தது. பின்னர் அதில் இருந்து படிப்படியாக பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கையை அரசு அதிகரித்தது.
இதன் பலனாக தற்போது நாடு முழுவதும் 1,470 பரிசோதனைக்கூடங்களில் கொரோனா பரிசோதனை இரவு பகலாக நடந்து வருகிறது. இதில் 501 பரிசோதனைக் கூடங்கள் தனியாருக்கு சொந்தமானவை ஆகும்.
இவ்வாறு பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரித்ததால் இந்தியாவில் நடந்து வரும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் நடந்த பரிசோதனை எண்ணிக்கை கடந்த ஜூலை 6-ந்தேதி 1 கோடியை கடந்தது. பின்னர் இந்த எண்ணிக்கை கடந்த 2-ந்தேதி 2 கோடியை தாண்டியது.
தற்போது நேற்று முன்தினம் 7 லட்சத்து 31 ஆயிரத்து 697 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதன் மூலம் இந்த எண்ணிக்கை 3 கோடியை கடந்து விட்டது. அதாவது 3 கோடியே 41 ஆயிரத்து 400 சளி மாதிரிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டு உள்ளன. கொரோனாவுக்கு எதிரான போரில் இது ஒரு மிகப்பெரும் மைல்கல்லாக கருதப்படுகிறது.
இதன் மூலம் 10 லட்சம் பேரில், பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,769 என்ற வகையில் அதிகரித்து உள்ளது. தற்போது 7 லட்சத்துக்கு மேல் என்ற தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 10 லட்சமாக அதிகரிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பரிசோதனைகளை அதிகரிப்பதால் தொற்று பாதித்தவர்களை விரைவில் கண்டறிந்து தனிமைப்படுத்தவது மட்டுமின்றி, வலுவான சிகிச்சை முறைகளும் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் இறப்பு சதவீதம் வெகுவாக குறையும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 57,584 பேர் குணமடைந்து உள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருப்பது சாதனை ஆகும்.
இதன் மூலம் இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 72.51 சதவீதமாக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.