

புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜனவரியில் இருந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. சமீப காலங்களாக தொற்று குறைந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 22,775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த சூழலில், நேற்று முன்தினம் 10 ஆயிரம் எண்ணிக்கையை கடந்து பாதிப்புகள் பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. நேற்று 15 ஆயிரம் கடந்து இருந்தது. இந்நிலையில், பாதிப்பு எண்ணிக்கை இன்று 20 ஆயிரம் கடந்து உள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 58,11,487 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.
இதனால், இந்தியாவில் இன்று காலை 7 மணிவரையிலான நிலவரப்படி, மொத்தம் 145 கோடியே 16 லட்சத்து 24 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.