இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இதுவரையிலான பலி எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து விட்டது.
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது
Published on

2,22,315 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக வேட்டையாடி வருகிறது. அதேநேரம், தினசரி 4 லட்சத்துக்கு மேற்பட்ட பாதிப்புகள் என்று உச்சம் பெற்று வந்த கொரோனா, தற்போது குறைந்து வருகிறது.இது நேற்றும் சரிந்திருந்தது. நேற்று முன்தினம் 2.40 லட்சத்துக்கு மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 2 லட்சத்து 22 ஆயிரத்து 315 பேர் என்ற நிலைக்கு புதிய பாதிப்புகள் இறங்கியிருந்தன.இந்தியாவில் கடந்த ஏப்ரல் 16-ந்தேதி 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த குறைந்த

எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

38 நாட்களுக்குப்பின் சரிவு

அந்தவகையில் கடந்த 38 நாட்களுக்குப்பின் இந்த எண்ணிக்கைக்கு புதிய பாதிப்புகள் குறைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் தொடர்ந்து 8 நாட்களாக 3 லட்சத்துக்கு குறைவான பாதிப்புகளே ஏற்பட்டு வருகின்றன.புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 81.08 சதவீதம் பேர் தமிழ்நாடு, மராட்டியம், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.இதில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டது தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மராட்டியர்கள் 26,672 பேர் இந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.புதிதாக பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்ட மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 447 ஆக உயர்ந்திருக்கிறது.

மராட்டியத்தில் அதிக உயிரிழப்பு

புதிய பாதிப்புகள் குறைந்தாலும், கொரோனா பலி எண்ணிக்கை நேற்று அதிகரித்து இருக்கிறது. நேற்று முன்தினம் 3,741 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 4,454 ஆக அதிகரித்து இருந்தது.இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தை (3,03,720) கடந்து விட்டது. இந்த எண்ணிக்கையை எட்டிய 3-வது நாடு என்ற சோகத்தை இந்தியா பெற்றிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா, பிரேசில் நாடுகள் இந்த அதிக எண்ணிக்கையை கடந்திருந்தன.நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் உயிரிழந்த 4,454 பேரில் அதிகபட்சமாக

மராட்டியத்தில் 1,320 பேர் பலியாகி இருந்தனர். தொடர்ந்து கர்நாடகா (624), தமிழ்நாடு (422), உத்தரபிரதேசம் (231), பஞ்சாப் (192), டெல்லி (189), கேரளா (188), மேற்கு வங்காளம் (156), பீகார் (107), ஆந்திரா (104) என பெரும்பாலான மாநிலங்கள் 100-க்கு மேற்பட்ட மரணங்களை பெற்றிருந்தன.

11-வது நாளாக அதிகம்

இதற்கிடையே 3 லட்சத்து 2 ஆயிரத்து 544 பேர் மேற்படி 24 மணி நேரத்தில் குணமடைந்திருக்கிறார்கள். இதன் மூலம் தொடர்ந்து 11-வது நாளாக புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.புதிதாக குணமடைந்தவர்களில் 72.23 சதவீதம் பேர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 37 லட்சத்து 28 ஆயிரத்து 11 ஆகியிருக்கிறது. இது மொத்த பாதிப்பில் 88.69 சதவீதம் ஆகும்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

நாடு முழுவதும் 10.17 சதவீதம் பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காலை நிலவரப்படி வீடுகள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 27 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆகும்.இவர்களில் 71.62 சதவீதம் பேர் கர்நாடகா, மராட்டியம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். விடுமுறை தினமான நேற்று முன்தினமும் நாடு முழுவதும் 19 லட்சத்து 28 ஆயிரத்து 127 பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. இதன்மூலம் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 33 கோடியை கடந்து விட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com