இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 96 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 96 லட்சத்தை கடந்தது
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்திருப்பது ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. இந்த மிகப்பெரிய எண்ணிக்கையை முதலில் தொட்ட நாடு என்ற மோசமான சாதனையை அமெரிக்கா அடைந்திருந்த நிலையில், அதைத் தொடர்ந்து இந்தியாவும் இந்த மிக மோசமான மைல்கல்லை எட்டி இருக்கிறது.

ஆனால் இவ்வளவு அதிகமான பாதிப்பை பெற்றிருந்தாலும், இந்தியாவில் கொரோனாவின் வீரியம் தற்போது குறைந்து விட்டது. சுமார் ஒரு லட்சத்தை தொடும் அளவுக்கு உயர்ந்த தினசரி தொற்று தற்போது 30 ஆயிரத்துக்கு குறைவாக மட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு சில மாநிலங்களை தவிர பிற மாநிலங்கள் அனைத்தும் கொரோனாவில் இருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன.

அதேநேரம் மொத்த பாதிப்பில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் மீண்டு விட்டனர். அதாவது குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்தை கடந்து விட்டது.

அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 709 பேர் தொற்றை வென்று வீடு திரும்பியிருந்தனர். இவர்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 96 லட்சத்து 6 ஆயிரத்து 111 என்ற அளவை எட்டியிருக்கிறது. இது மொத்த பாதிப்பில் 95.53 சதவீதம் ஆகும்.

அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் தினமும் குணமடைந்து வீடு திரும்புவதால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் 3 லட்சத்து 03 ஆயிரத்து 639 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர்.

இது நேற்று முன்தினத்தை விட 1,705 பேர் குறைவாகும். மொத்தத்தில் 3.02 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 15 நாட்களாக 4 லட்சத்துக்கு குறைவாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 24,337 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 55 ஆயிரத்து 560 ஆகியிருக்கிறது.

அதேநேரம் மேற்படி 24 மணி நேரத்தில் மேலும் 333 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவியிருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக 98 பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தொடர்ந்து மேற்கு வங்காளம், கேரளா மற்றும் டெல்லியில் முறையே 40, 30, மற்றும் 26 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இதனால் இதுவரை பலியான கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 810 ஆக உயர்ந்து விட்டது. இது 1.45 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் 9 லட்சத்து 134 சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 16 கோடியே 20 லட்சத்து 98 ஆயிரத்து 329 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com