கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்வு

கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது.
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்வு
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் சமீப நாட்களாக ஜிகா வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. கொசுக்களின் வழியே பரவ கூடிய இந்த தொற்றுக்கு கேரளா அதிக இலக்காகி இருக்கிறது. இதுபற்றி கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, கேரளாவில் மேலும் 5 பேருக்கு புதிதாக ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 5 பேரில், 2 பேர் அனயரா பகுதியை சேர்ந்தவர்கள். குன்னுகுஷி, பட்டோம் மற்றும் கிழக்கு கோட்டை பகுதிகளில் தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போது சிகிச்சையில் 8 பேர் மட்டுமே உள்ளனர். அதில் 3 பேர் கர்ப்பிணிகள். இந்த ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பில் முதல் நோயாளியும், அடுத்த 13 சுகாதார ஊழியர்களும் அனயாராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை சேர்ந்தவர்கள்.

அனயாராவின் 3 கி.மீ. சுற்றளவு பகுதியில் அதிக அளவில் ஜிகா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் மற்ற இடங்களில் கொசுக்கள் பரவாமல் தடுக்க இப்பகுதியில் உள்ள கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஜிகா வைரஸ் தொற்று குறித்து மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். ஜிகா வைரசுக்கு எதிராக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் திருவனந்தபுரத்தின் மற்ற பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு அருகிலேயே கொசுக்களின் இனப்பெருக்கம் நடைபெற்று பரவும் வகையில் இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது குறித்தும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com